அமெரிக்காவின் மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' தனது நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தியது. ஈரான் போர் ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நீட்டிக்க (Status Quo) முடிவு செய்துள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கெவின் வார்ஷ் தலைமையில் நடந்த முதல் 'ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி' (FOMC) கூட்டம் இது. இதில் வட்டி விகிதங்களை மாற்றாமல் தற்போதைய நிலையிலேயே வைப்பதற்கு, குழுவில் உள்ள 12 உறுப்பினர்களும் (12-0 என்ற கணக்கில்) ஒருமனதாக வாக்களித்துள்ளனர். இதன்படி, அமெரிக்காவின் முக்கிய வட்டி விகிதமான 'ஃபெடரல் ஃபண்ட்ஸ் ரேட்' (Federal Funds Rate) மாற்றமின்றி 3.50% முதல் 3.75% என்ற அளவிலேயே நீடிக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சில நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், அமெரிக்கப் பொருளாதாரம் சீரான வேகத்தில் வலுவாக வளர்ந்து வருகிறது. உற்பத்தி மற்றும் மூலதன முதலீடுகள் நன்றாக உள்ளன என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாகி வருவதால், வேலையின்மை விகிதத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை; வேலைவாய்ப்புச் சந்தை நிலையாக உள்ளது என கூறியுள்ளனர்.
பொருளாதாரம் நன்றாக இருந்தாலும், பணவீக்கம் இன்னும் அவர்களின் இலக்கான 2%-க்கும் அதிகமாகவே நீடிக்கிறது. குறிப்பாக எரிசக்தி போன்ற துறைகளில் விநியோகத் தடைகள் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை வலுவாக இருப்பதால் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. அதே சமயம், பணவீக்கம் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தாமல், தற்போதைய நிலையிலேயே வைத்து நிலைமையைக் கண்காணிக்க கெவின் வார்ஷ் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை கூட்டாமல் அப்படியே வைத்திருக்க எடுத்த முடிவு, பொதுவாக தங்கம் விலைக்கு சாதகமான ஒரு சூழலையே உருவாக்கும். உலக சந்தையில் தங்கம் விலையானது அமெரிக்க வட்டி விகிதங்களோடு நெருங்கிய தொடர்புடையது. பொதுவாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து விட்டு வட்டி தரும் அமெரிக்க அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கம் விலை குறையும்.
ஆனால், தற்போது வட்டி உயர்த்தப்படவில்லை என்பதால், தங்கம் விலை உடனடியாகக் கீழே விழுவதற்கான வாய்ப்பு குறைவு. இது தங்கத்திற்கு ஒரு பாதுகாப்பான அடித்தளத்தைக் கொடுக்கிறது.அமெரிக்காவில் பணவீக்கம் இன்னும் 2%-க்கும் அதிகமாகவே நீடிக்கிறது என்று ஃபெடரல் ரிசர்வ் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக விலைவாசி உயரும் காலங்களில், பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்ப்பார்கள். வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும்போது, தங்கத்தில் பெரிய அளவில் விலை வீழ்ச்சி இருக்காது பெரிய அளவில் விலை உயர்வும் இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தாததால், அமெரிக்க டாலர் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராகப் பலமடைவது தற்காலிகமாகத் தடுக்கப்படும். ரூபாய் மதிப்பு நிலையாக இருந்தால், நாம் இறக்குமதி செய்யும் தங்கத்தின் விலையும் ஓரளவுக்குக் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதனால் இந்தியாவிலும் தங்கம் விலையில் பெரிய ஏற்றமோ இறக்கமோ இதனால் ஏற்படாது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,329 டாலராக உள்ளது. இது நேற்றை விட 6 டாலர் குறைவு.


Click it and Unblock the Notifications

