டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று இருக்கிறது. இந்த முறை பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.
எனவே பழைய கொள்கைகள் அப்படியே தொடருமா? அல்லது கூட்டணி கட்சிகளுக்காக மாறுபட்ட நிலைப்பாட்டை அரசு எடுக்குமா என முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலை காணப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரண்டாவது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையும் கொள்கைகளையும் அப்படியே பின் தொடர்வாரா என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி இருக்கும் நரேந்திர மோடி அவர்களிடம் முதல் 100 நாள் திட்டத்தை வரையறுக்குமாறு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக மோடி தலைமையிலான அரசின் முதல் 100 நாள் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பங்குச்சந்தையின் போக்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்ற போது முதல் 100 நாட்களில் சென்செக்ஸ் 9.8% உயர்வு கண்டது ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியேற்று போது 6.74 % குறைந்தது.
தற்போது கூட்டணி தயவுடன் ஆட்சி அமைக்கப்பட்டு இருக்கும் சூழலில் கூட்டணிக்காக சில கொள்கை தளர்வுகளுக்கு மத்திய அரசு வரக்கூடும் என்ற ஒரு சூழல் நிலவுகிறது.
ஆனால் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச்சந்தை மீதும் மோடி அரசின் மீதும் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக ஸ்டாக்பாக்ஸ் தரகு நிறுவனத்தின் ஆய்வாளரான மணி சவுத்ரி கூறியுள்ளார்.
குறிப்பாக முதல் 100 நாட்களில் மோடி அரசு எப்படி செயல்படுகிறது என்பதை கொண்டு இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன துறைகள் வளர்ச்சி அடையும் என்பதை ஓரளவு கணிக்க முடியும் என்கிறார்.
உள்கட்டமைப்பு, உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் அரசு இதற்கு முன்பு கவனம் செலுத்திய நிலையில் தற்போதும் அது தொடருமா என்பது இந்த 100 நாட்களில் தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
கூட்டணி அரசு என்பதால் மக்கள் நலம் சார்ந்த சில திட்டங்களை அரசு அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருந்தாலும் பொருளாதாரம் மற்றும் அரசின் நிதி செலவினங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஏற்கனவே இருந்த கொள்கைகளே தொடரும் என நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.
ரயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் உள்ள நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொழில்துறை, வங்கி, உள் கட்டமைப்பு மற்றும் பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் கவனம் செலுத்திய நிலையில் அது தொடர வாய்ப்புள்ளது என ப்ரூடெண்ட் ஈக்விட்டி நிறுவனத்தின் ஆய்வாளர் திவாகர் ரானா கூறுகிறார்.
இருப்பினும் ரயில்வே, பசுமை எரிசக்தி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சி என்ற ஊகம் உண்டான நிலையில் அது தற்போது குறைந்து இயல்பு நிலைக்கு வரும் சாத்தியம் இருப்பதாக கணித்துள்ளார். ஐடி, சுகாதாரம் ,வாகனங்கள் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சீரான வளர்ச்சியில் இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications