சென்னை: பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ.4,890.6 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் நஷ்டம் அதிகரித்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் மிகவும் பிரபலமான நிறுவனம் பிளிப்கார்ட். இந்நிறுவனம் அண்மையில் தனது பிக் பில்லியன் டேஷ் என்ற பண்டிகை கால விற்பனையை நடத்தியது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பண்டிகை கால விற்பனைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு மற்றும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கியதாகவும் பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வணிக புலனாய்வு தளமான Tofler-ன் தரவுகளின்படி, வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.56,013 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சுமார் 9 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் வருவாய் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளபோதிலும், பிளிப்கார்ட் நிறுவனத்தால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதுதான்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.4,890.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு இது முந்தைய நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.3,371.2 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் நஷ்டத்துக்கு காரணம் செலவு அதிகமானதுதான்.
நிறுவன பங்குகளை வாங்குதல், பணியாளர்-பலன் செலவுகள் மற்றும் நிதி தொடர்பான போன்ற செலவுகளுக்காக கடந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.60,858 கோடியை செலவிட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11.5 சதவீதம் அதிகமாகும். முந்தைய 2021-22ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் செலவினம் ரூ.54,580 கோடியாக இருந்தது. பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் கலிர் ரீடெயில் (22 சதவீதம்), போன்டே பேஷன்ஸ் (19 சதவீதம்) மற்றும் லாஜிஸ்டிக்ஸ்நவ் போன்ற நிறுவனங்களில் கணிசமான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications