கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து, பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டன. இப்போது, அடுத்த கட்டமாக, ஜிஎஸ்டி அமைப்பில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பெரிய குறைபாட்டை சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன. அதுதான் 'தலைகீழ் வரி அமைப்பு' (Inverted Duty Structure) என்று சொல்லப்படும் சிக்கலாகும்.
தலைகீழ் வரி என்றால் என்ன..?: பொதுவாக, ஒரு பொருளை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் மூலப்பொருளுக்கு விதிக்கப்படும் வரியை விட, அந்த மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இறுதிப் பொருளுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருக்கும் நிலைமைதான் தலைகீழ் வரி அமைப்பு என்று சொல்லப்படுகிறது.

மூலப்பொருட்களை வாங்கும்போதே அதிக வரியை செலுத்திவிடும் வியாபாரிகள், தங்கள் இறுதிப் பொருளை விற்கும்போது குறைந்த வரியே விதிக்கிறார்கள். இதனால், அவர்கள் முதலில் செலுத்திய கூடுதல் வரியை திரும்பப் பெறுவதற்காக அரசுடன் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தொழிலுக்கான முதலீட்டு பணத்தை பெருமளவு பாதிக்கிறது.
புதிய இலக்குகள் என்ன..?: கடந்த செப்டம்பர் மாதம் உரங்கள், துணிகள், மிதிவண்டிகள் போன்ற சில பொருட்களின் வரியை குறைத்து இந்த சிக்கலை ஓரளவு சரி செய்தனர். ஆனால், இப்போது ஜிஎஸ்டி கவுன்சில் மேலும் சில துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது.
புதிய துறைகள் : ரயில்வேயின் சில உதிரி பாகங்கள், உலோக தாதுக்கள் மற்றும் மோட்டார் பம்புகள் போன்ற பொருட்களில் உள்ள தலைகீழ் வரி அமைப்புகளை சரிசெய்ய அரசு ஆலோசித்து வருகிறது.
ரியல் எஸ்டேட் ஆய்வு : அதேபோல், ரியல் எஸ்டேட் துறைக்கான ஜிஎஸ்டி அமைப்பை மறு ஆய்வு செய்ய, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் தனி அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு குறித்து பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான குழுவும் ஏற்கனவே நிறைய பணிகளை முடித்துள்ளது.
இந்தத் தலைகீழ் வரி அமைப்பால் ஏற்படும் ரீஃபண்ட் கோரிக்கைகள் ஆண்டுதோறும் சுமார் ரூ.30,000 கோடி வரை இருக்கும் என்று 2021ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. இது ஒரு பெரிய தொகை என்பதால், இதில் உள்ள சர்ச்சைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், நவம்பர் 1ஆம் தேதி முதல், ரீஃபண்ட் கோரிக்கைகளில் 90% தொகையை, சில தரவுகளைச் சரிபார்த்து, தற்காலிகமாக உடனடியாக திரும்பக் கொடுக்கும் முறையை அரசு கொண்டு வந்துள்ளது.
நிபுணர்களின் கோரிக்கைகள் என்ன?: வரி நிபுணர்கள் அரசின் இந்த முயற்சியைப் பாராட்டும் அதே வேளையில், சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். தற்போது இந்த ரீஃபண்ட் வசதி, வெறும் மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரிக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், மூலதனப் பொருட்கள் (இயந்திரங்கள்) மற்றும் உள்ளீட்டு சேவைகள் (சரக்குப் போக்குவரத்து, வேலைக்கான கூலி சேவைகள்) ஆகியவற்றுக்குச் செலுத்திய அதிகப்படியான வரிகளுக்கு இந்த ரீஃபண்ட் வசதியை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சிக்கல்கள் அனைத்தையும் சரி செய்து, ஜிஎஸ்டி அமைப்பை மேலும் எளிமையாக்குவதுதான் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்கிடையே, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், பிப்ரவரி மாதத்திற்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதுகுறித்து தெளிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications