வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) அக்டோபர் 2024 இல் இந்திய பங்குகளை பெருமளவில் விற்று, கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்ததில் இருந்து உலகளவில் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று காரணமாக இந்திய சந்தையை விட்டு முதலீடுகள் வெளியேறிய போது கூட 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே வெளியேற்றினர், ஆனால் அக்டோபர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். கிட்டத்தட்ட 83,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FIIs) முதலீட்டு வெளியேற்றத்தின் பாதிப்பைக் குறைக்க உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) சுமார் ரூ.74,200 கோடி மதிப்பிலான முதலீடுகளை இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளது. Nifty 50 குறியீடு இந்த காலகட்டத்தில் சுமார் 4% குறைந்துள்ளது, இந்த ரூ.74,200 கோடி முதலீட்டில் மியூச்சவல் பண்டு முதலீடுகளும் அடங்கும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் கடந்த ஒரு மாதத்தில் உருவான 'Buy China, Sell India' கொள்கை முதலீட்டு வெளியேற்றத்தைத் தூண்டும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சீனாவின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள் மற்றும் அந்நாட்டு அரசின் ஊக்கத்தொகை நடவடிக்கைகள் கணிசமான வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவின் சந்தை மதிப்பீடு மற்றும் காலாண்டு வருவாய் வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. பல இந்திய நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் மந்தமான வருவாய், லாப அளவீடுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாலும் கணிசமான முதலீடுகள் வெளியேறியுள்ளது.
சில பங்குச்சந்தை நிபுணர்கள் சீனாவின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாகவும், அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி மீதான கவனம் நேர்மறையான சந்தை செயல்திறனுக்கு வழிவகுக்கும் என்றும் நம்புகின்றனர். இருப்பினும், மற்றவர்கள் சீனாவின் மீட்சி குறுகிய காலமாக இருக்கலாம் மற்றும் அதிக கடன் மற்றும் அதிகப்படியான திறன் போன்ற கட்டமைப்பு சிக்கல்கள் நீடிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
இந்தியா நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கினாலும், அதிக மதிப்பீடு, பலவீனமான நிறுவன வருவாய் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் ஆகிய பிரச்சனைகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குச்சந்தை முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டு ஓட்டத்தின் எதிர்காலம் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், உள்நாட்டுக் கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வருவாய் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. முதலீட்டாளர்கள் இந்த காரணிகளை கவனமாகக் கண்காணித்துத் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications