ராஜஸ்தான் மாநிலம் என்றவுடன் பாலைவனம், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை தான் நம் கண்முன் வந்து செல்லும். இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை தேடி தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அதிகளவில் வருகின்றனர்.
அதேசமயம் இந்த சவாலான நிலப்பரப்பில் முன்னாள் தையல்காரரான ராம்சந்திர ரத்தோட் தனது பூர்வீக நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ஈட்டி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவரின் முன்னோடி விவசாய உத்திகள் உலகளாவிய விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. ராம்சந்திர ரத்தோட்டின் வாழ்க்கை பக்கங்களை புரட்டி பார்த்தால் அதில் அதிக துயரங்கள், கஷ்டங்கள் மற்றும் சவால்கள் உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் லுனி பகுதியை சேர்ந்த விவசாய தம்பதிகளுக்கு மகனாக ராமசந்திர ரத்தோட் பிறந்தார். சவாலான சூழ்நிலையில் வளர்ந்தார். குடும்பத்தின் கஷ்டமான சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் விவசாய வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். குடும்பத்தை நடத்துவதற்காக தையல் தொழில் செய்தார், அதேசமயம் சுயநிதி மூலம் 12ம் வகுப்பு வரை படித்தார். 2004ல் அவரது தந்தை இறந்த பிறகு மீண்டும் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான்.
பூர்வீக நிலத்தில் முதலில் பருப்பு, தினை மற்றும் ஜோவர் பயிரிட்டார். இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் கிரிஷக் மித்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக ஜோத்பூர் சி.ஏ.இசட்.ஆர்.ஐ. இன்ஸ்டிட்யூட்டில் 7 நாள் பயிற்சிக்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதுதான் அவரின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.
மழை நீரை விவசாயத்திற்காக எவ்வாறு சேமிப்பது மற்றும் பாலைவன சூழ்நிலையில் புதுமையான விவசாய முறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவருக்கு அந்த பயிற்சி முகாம் கற்றுக் கொடுத்தது. மேலும் அரசாங்கததின் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது.
தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவரால் ஊக்கப்படுத்தப்பட்ட ராமசந்திர ரத்தோட் 2018ல் பாலிஹவுஸ் அமைத்தார். அதில் மழைநீரை பயன்படுத்தி வெள்ளரி சாகுபடி செய்தார். அந்த மாவட்டத்தில் எந்வொரு விவசாயியும் செய்யாத சாதனையை வெறும் 100 சதுர மீட்டரில் 14 டன் மகசூல் செய்து சாதனை படைத்தார். இதனையடுத்து தனது புதுமை பயணத்தை தொடர்ந்தார். பாலைவன பகுதியில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் சுரைக்காய்களை வெற்றிகரமாக பயிரிட்டார். மேலும் இயற்கை உர உற்பத்தியிலும் முன்னோடியாக விளங்குகிறார்.
ராமசந்திர ரத்தோட்டின் வெற்றி அந்த பகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்ற விவசாயிகளும் அவரிடம் ஆலோசனைகளை கேட்டு புதுமையான விவசாய நடைமுறைகளை பின்பற்ற தொடங்கினர். ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்பை நிறுவி சக விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடைமுறைகளை புதுமையாக செய்ய அவர் உதவுகிறார்.
அவரது புதுமையான முயற்சிகளை அங்கீகரித்து 2018ல் மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விவசாயத்தில் கண்டுபிடிப்புகள் திட்டத்தின் பிராண்ட் தூதரக நியமிக்கப்பட்டார். விதிவிலக்கான விளைபொருட்களுக்காக லுனி பிராந்தியத்தில் சிறந்த விவசாயி என்ற பட்டத்தையும் அவர் பெற்றார்.
ராமசந்திர ரத்தோட் பேட்டி ஒன்றில், மழைநீரை சேமிக்கவும், அதன் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்த விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தால் மாநிலம் நிச்சயமாக வளர்ச்சி அடையும். நான் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பாதிக்கிறேன் மற்றும் எனது பிராந்தியத்தில் உள்ள மற்ற விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்த எனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார். உலகம் முழுவதில் உள்ள விவசாய நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் ராம்சந்திர ரத்தோட்டின் விவசாய நிலத்துக்கு வந்து பார்வையிட்டு வியந்து செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications