இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாக்ஸ்கான் மத்தியில் பெரும் போட்டி உருவாகியிருக்கும் வேளையில், பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சேவை அளிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு அதாவது சப்ளையர்களுக்கு பணம் செலுத்தாமல் இருக்கிறது.
இதனால் 6க்கும் அதிகமான சப்ளையர் நிறுவனங்கள் பாக்ஸ்கான்-ஐ திவாலானதாக அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவில் Foxconn நிறுவனம் சென்னை மட்டும் அல்லாமல் பெங்களூர் உட்பட பல நகரங்களில் தனது உற்பத்தி மற்றும் சேவை தளங்களை வைத்துள்ளது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சேவை அளிக்கும் சுமார் 6 சப்ளையர் நிறுவனங்களுக்கு 143 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளதாகவும், தொடர்ந்து பணத்தை செலுத்துவதில் தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரு நிறுவனம், நிலுவைத் தொகையை வேகமாக வசூலிக்க வேண்டுமென Foxconn மீது அந்நிறுவனம் திவாலானதாக அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பெங்களூரில் விமான நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தங்கும் விடுதி வசதிகளை வழங்கிய BCD Emprasa LLP என்னும் நிறுவனம் தான் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.
BCD Emprasa நிறுவனம் கூறுகையில் வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்தப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பாக்ஸ்கான் கொடுக்க வேண்டிய நிலுவை தொகை, காலதாமதத்திற்கான வட்டி, சேவை கட்டணம், இழப்பீடு ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 143 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் ஒரு நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை செலுத்தா பட்சத்தில் சேவை அளித்தவர்கள் பணத்தை பெறுவதற்காக திவால் நடவடிக்கை எடுக்க கோரி NCLT அமைப்பிடம் கோரிக்கை வைப்பது வழக்கம். இத்தகைய கோரிக்கையால் நிறுவனங்கள் திவாலாக அறிவிக்கப்படாது.
மேலும் இந்த வழக்கு காரணமாக இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி, முதலீடு, விரிவாக்க திட்டம் போன்றவற்றில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
