புனே: இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி பார்ட்னர்களாக கிடைக்கும் வேலை பலரது குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறது. ஸ்விக்கி , சோமேட்டோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களில் எல்லாம் கல்லூரி செல்லும் மாணவர்கள் , பணிநீக்கம் காரணமாக வேலை இழந்த நபர்கள், பெண்கள் என பலரும் டெலிவரி பார்ட்னர்களாக வேலை செய்வதையும் நாம் பார்க்க முடிகிறது.
இவ்வாறு டெலிவரி பார்ட்னர்களாக பணிபுரியும் ஒவ்வொருவருக்கு பின்னாலும் உருக்கமான ஒரு கதை இருக்கும். அப்படி விபத்தினால் உடல் குறைபாடு ஏற்பட்ட ஒரு நபர் ஸோமேட்டோ மூலம் தனக்கு வாழ்வு கிடைத்திருப்பது குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. புனேவை சேர்ந்த ஸ்ரீபால் காந்தி என்பவர் சப்வே உணவகத்தில் இருந்து சோமேட்டோ செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்திருக்கிறார்.

இந்த உணவு ஆர்டர் அவர் எதிர்பார்த்த உணவை தந்ததோ இல்லையோ ஆனால் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்தது என தன்னுடைய சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அவர் தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் டெலிவரிக்கு வந்ததாகவும் அப்போது டெலிவரி பார்ட்னரிடம் தான் ஆர்டர் செய்ததில் இரண்டு பொருட்கள் இல்லை என கூறினாராம். பின்னர் சப்வே உணவகத்தை தொடர்பு கொண்ட போது உணவகமே அதனை வைக்க தவறி விட்டது தெரிய வந்ததாம்.
சப்வே உணவகமோ டெலிவரி பார்ட்னரிடம் நீங்கள் மீண்டும் வந்து இதை வாங்கி செல்ல முடியுமா என கேட்டதற்கு அந்த டெலிவரி பார்ட்னர் உடனடியாக கண்டிப்பாக சார் இது என்னுடைய பொறுப்பு எங்களுடைய வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் எனக்கூறி அங்கிருந்து மீண்டும் அந்த உணவகத்திற்கு சென்று அந்த பேக்கேஜில் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் கொண்டு வந்து வாடிக்கையாளர் காந்தியிடம் கொடுத்து இருக்கிறார் .
அதற்காக சப்வே நிறுவனம் அவருக்கு வழங்குவதாக இருந்த 20 ரூபாய் மற்றும் உணவினை ஆர்டர் செய்த காந்தி கொடுத்த டிப்ஸையும் ஏற்க மறுத்து விட்டாராம். அப்போது காந்தி அவரிடம் பேச்சு கொடுத்த போது தான் அந்த டெலிவரி பார்ட்டனர் இதற்கு முன் பாலோன்ஜி நிறுவனத்தில் கட்டுமான கண்காணிப்பாளராக வேலை செய்து வந்ததும் மாதத்திற்கு 1.25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதும் தெரிய வந்தது.
திடீரென ஏற்பட்ட ஒரு கார் விபத்து காரணமாக இவருடைய உடலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது, இதனால் அவரால் பழையபடி தன்னுடைய சூப்பர்வைசர் வேலைக்கு செல்ல முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாத அவர் சொமேட்டோவில் டெலிவரி பார்ட்னராக இணைந்திருக்கிறார். நான் உடல் குறைபாடு கொண்டவனாக இருந்தாலும் சோமேட்டோ எனக்கு ஒரு வேலை வாய்ப்பை தந்திருக்கிறது வாழ்க்கை தந்திருக்கிறது,எனவே அவர்களின் பெயர் கெட்டுப் போக நான் விடமாட்டேன் என அவர் கூறினாராம்.
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கும் சோமேட்டோ நிறுவனத்திற்கும் நன்றி என பதிவிட்டிருக்கும் காந்தி, நீங்கள் எடுத்து ஒரு சிறிய முடிவு பலரது முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். அவருடைய இந்த பேஸ்புக் பதிவு சமூக வலைத்தளங்களின் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications