இந்திய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கௌதம் அதானி. அதானி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் விமான நிலையம், துறைமுகம், புதுப்பிக்க தக்க எரிசக்தி, சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் அதானி குழுமம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் மீது லஞ்ச புகார் எழுந்தது. அதானி குழுமம் மீது கடந்தாண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட லஞ்ச புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என அவர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ப்ளூம்பெர்க் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, தலைமை செயல் அதிகாரி வினீத் ஜெயின் உள்ளிட்ட ஏழு பேர் மீது கடன் பத்திர மோசடி மற்றும் லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 2020ல் இருந்து 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிக விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கும் வகையில் விநியோகம் ஒப்பந்தங்களை பெறுவதற்காக கௌதம் அதானியின் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.
இதனை மறைத்து கௌதம் அதானியின் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . அதானி உள்ளிட்டோருக்கு இந்த விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
அமெரிக்காவில் தற்போது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது . இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் அதிகாரிகளை அதானி குழும பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரம்ப் அரசு பொறுப்பேற்றது முதலே அதானி குழுமம் சார்பாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் டிரம்ப் நிர்வாகம் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை நீக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications