தங்கத்தின் விலை இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வண்ணம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. முதலீட்டு நிறுவனங்கள், மத்திய வங்கிகள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களுக்குள் தங்கத்தின் விலை 10 முறை புதிய உச்சத்தை தொட்டு விட்டது.
கடந்த வர்த்தக தினத்தில் 1 அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை அதுவரையிலான புதிய உச்சமான 2.886 டாலரை எட்டியது. உள்நாட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ.85,279ஐ எட்டியது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கத்தின் சில்லரை விலை (10 கிராம்) ரூ.86,670ஆக இருந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது, முதலீட்டாளர்களும்,நுகர்வோரும் தங்கள் செல்வத்தை பங்குகள் போன்ற ரிஸ்க் உள்ள சொத்துக்களிலிருந்து பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்துக்கு மாற்றுவதை வெளிப்படுத்துகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணியாதது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, டிரெம்ப் வெற்றி போன்ற காரணங்களால் கடந்த 2024ம் ஆண்டில் தங்கத்தின் விலை 30 சதவீதம் உயர்ந்தது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான காலத்தில் ஒரு சிறந்த விலை ஏற்றமாகும்.
தற்போது தங்கம் உள்பட இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவீதம் சர்வதேச வர்த்தக வரியை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து நியூயார்க் வர்த்தகர்கள் தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களை பிசிக்கலாக விநியோக்க வேண்டும் கோரியுள்ளனர்.
உலக தங்க கவுன்சிலின் தகவல்படி, தொடர்ந்து 3வது ஆண்டாக கடந்த ஆண்டிலும் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் 1,000 டன்னை தாண்டிவிட்டது. 2024ம் மத்திய வங்கிகள் 1,044.6 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. அதிகபட்சமாக போலந்து89.54 டன் தங்கம் வாங்கியுள்ளது. அடுத்ததாக இந்திய ரிசர்வ் வங்கி 72.60 டன்களையும், சீனா 44.17 டன்களையும் வாங்கியுள்ளன.
வர்த்தக போர்கள், புவிசார் அரசியல் கவலைகள், மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது, சர்வதேச அளவில் நாடுகளின் வளர்ச்சியின் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று சர்வதேச தரகு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிட்டி நிறுவனம் தங்க விலை குறித்த தனது கண்ணோட்டத்தை மறுமதிப்பீடு செய்துள்ளது. தனது குறுகிய கால விலை இலக்கை 3,000 டாலராகவும், 2025ம் ஆண்டுக்கான அதன் சராசரி கணிப்பை 2,800 டாலரிலிருந்து 2,900 டாலராக உயர்த்தியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் தனது தங்க விலை இலக்கை 3,000 டாலராக நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications