உலக புகழ்பெற்ற முதலீட்டாளரும், பொருட்கள் சந்தை நிபுணருமான ஜிம் ரோஜர்ஸ் (Jim Rogers), தற்போதைய சந்தை நிலவரங்கள் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர், தன்னிடம் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் இருப்பதாகவும், அவற்றை விற்பனை செய்ய துளியும் திட்டமில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
பங்குச்சந்தை குறித்த பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சந்தை நேரத்தைப் பார்த்து முதலீடு செய்வதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தற்போதைய உச்ச விலையில் இந்த இரண்டு உலோகங்களையும் புதிதாக வாங்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விலை உயர்ந்தபோதும் சிறிதளவு வெள்ளியை வாங்கியதாக கூறிய அவர், தனது தங்கமோ அல்லது வெள்ளியோ ஒருபோதும் விற்றது கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தான், முதலீட்டாளர்களுக்கு அவர் ஒரு முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், தங்கமோ, வெள்ளியோ இது வாங்குவதற்குச் சரியான நேரம் இல்லாவிட்டாலும், காலப்போக்கில் சிறிய அளவுகளில் இந்த உலோகங்களை வாங்கி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்தால் மட்டுமே அதை நான் வாங்க விரும்புவேன். ஒரு பொருள் குறைந்த விலையில் இருக்கும்போது அல்லது சந்தையால் புறக்கணிக்கப்படும்போது மட்டுமே நான் அதை வாங்குவேன்.
அவை யாரும் விரும்பாத நிலையில் கீழே இருக்கும்போது, நான் அதிகமாக வாங்குவதற்கு முயற்சிக்கிறேன். நான் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை என் குழந்தைகளுக்கு சென்று சேர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
வெள்ளி விலை உயர்வுக்கு என்ன காரணம்..?: சமீபத்தில் வெள்ளி, தங்கத்தை விட அதிக அளவில் விலை உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணத்தையும் ரோஜர்ஸ் விளக்கினார். தங்கம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே அதன் உச்சத்தை எட்டிவிட்டது. ஆனால், வெள்ளி அதற்கு முன்பு அதிகமாக வீழ்ச்சி அடைந்திருந்ததால், அதன் மீட்சி இப்போது அதிக வேகத்துடன் கூடியதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், நான் மிகவும் புத்திசாலி அல்ல. ஆனால், ஒரு பொருள் கீழே இருந்தால், நான் அதை ஒரு புதிய உச்சத்தில் இருக்கும் ஒன்றை விட வாங்குவதற்கே விரும்புவேன். ஆனால், நான் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களையும் வைத்திருக்கிறேன்.. எதையும் விற்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தங்கம் அவசியம் : உலகளாவிய கடன் மற்றும் நிதிக் கொள்கைகள் குறித்து ஜிம் ரோஜர்ஸ் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா தான் வரலாற்றிலேயே அதிக கடன் வாங்கிய நாடு. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாணயங்களின் மதிப்பை இழக்கச் செய்யும்போது, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கம் வைத்திருப்பது பொதுவாகச் சிறந்த வழியாகும் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications