இந்தியாவில் வசிக்கும் நபர்கள் அளவுக்கு அதிகமாக பணமோ அல்லது நகையோ வைத்திருந்தால் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இது அனைவருக்கும் பொருந்துமா என்றால் அப்படி இல்லை. வழக்கத்திற்கு மாறாக தங்கம் வைத்திருக்கும் பட்சத்தில் வருமானவரித் துறையினர் அவற்றை உடனே பறிமுதல் செய்ய முடியாது. இதற்கென சில விதிகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?: வருமான வரிச் சட்டத்தின்படி ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வைத்திருக்கலாம். இதற்கான சட்டப்பூர்வ வரம்பு இல்லை. இருந்தாலும் அந்தத் தங்கம் உங்களுக்கு எப்படி வந்தது என்ற முழு ஆதாரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வரும் போது குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்ய மாட்டார்கள். உதாரணமாக திருமணம் ஆன பெண் என்றால் அவரிடம் 500 கிராம் வரை தங்கம் இருக்கலாம். திருமணம் ஆகாத பெண் என்றால் 250 கிராம் தங்கம், ஆணாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் 100 கிராம் வரை தங்கம் இருக்கலாம். இந்த லிமிட் வரை இருந்தால் வருமானவரித்துறையினர் சோதனை செய்ய வரும் போது பறிமுதல் செய்ய முடியாது.

இதைத் தாண்டி தங்கம் வைத்திருந்தாலும் பிரச்சனை இல்லை. அந்தத் தங்கம் உங்களுக்கு எப்படி வந்தது என்ற விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வருமானமா அல்லது மூதாதையர்களின் சொத்து மூலம் பெறப்பட்டதா? என்ற முழு விவரங்களையும் காண்பித்தால் பிரச்சனையில்லை.
தங்கத்தை எங்கு வைத்திருக்கலாம்?: உங்கள் தங்கத்தை உங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். பீரோவில் வைக்கலாம், லாக்கரில் வைக்கலாம். நீங்கள் வைத்திருக்கும் இடம் முக்கியமே கிடையாது. அந்த நகையை வாங்குவதற்கு உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுதான் இங்கு முக்கியம்.
நீங்கள் சுயமாக சம்பாதித்து நகை வாங்கி இருக்கிறீர்களானால் அதற்கான பில், இன்வாய்ஸ் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். அதுவே பரம்பரை பரம்பரையாக வைத்திருந்த தங்கம் என்றால் அதற்கான சான்றுகள் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது சட்டபூர்வமானதாகவே கருதப்படும்.
ஒரு வேளை உங்களால் வருமானவரித்துறையினரின் சோதனையின் போது சரியான வருமான ஆதாரத்தை தெரிவிக்க முடியவில்லை என்றால் அது "Undisclosed income" என வகைப்படுத்தப்படும். அதாவது நீங்கள் கணக்கில் காட்டாத வருமானமாக ஐடி துறையினர் வகைப்படுத்துவார்கள். இதற்கு அபராதமும் வரியும் விதிக்கப்படுவதோடு நகைகள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
