டெல்லி: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறைய உள்ளது. நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்தார், சில பொருட்கள் மீதான வரியை அதிகரித்து அறிவித்தார்.
இந்த பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து எந்தெந்த பொருட்களின் விலை குறையப் போகிறது, எந்த பொருட்களின் விலை அதிகரிக்க போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

விலை குறையும் பொருட்கள்:
1. தங்கம், வெள்ளி: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாக குறைத்துள்ளார். எனவே தங்கம், வெள்ளி விலை கணிசமாக குறையப் போகிறது.
2. பிளாட்டினம் : பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரியும் 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் குறைய உள்ளது.
3. செல்போன், சார்ஜர்கள்: செல்போன்கள், சார்ஜர்கள், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாக என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்கள், சார்ஜர்கள் விலை குறையும்.
4. புற்றுநோய் சிகிச்சை மருந்துகள்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.எனவே புற்றுநோய் சிகிச்சை செலவு குறைய உள்ளது.
5. கடல் உணவுகள்: இறால், மீன் உணவுகள் மீதான சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே கடல் உணவு வகைகளின் விலை குறையும்.
6. சோலார் மின் உற்பத்தி உபகரணம்: சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும்.சோலார் செல்கள், சோலார் பேனல்கள் மீதான மூலதனப் பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலை குறையும்.
7. காலணிகள், பெல்ட்டுகள்: தோல் தயாரிப்புகளுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் காலணிகள் , பெல்ட்டுகள் ஆகியவற்றின் விலை குறைய உள்ளது.
8. 25 கனிமங்கள்: முக்கியமான 25 கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
9. ஃபெரோநிக்கல், ப்ளிஸ்டர் காப்பர்: அரசு இவ்விரண்டு கனிமங்களுக்கு அடிப்படை சுங்க வரியை ரத்து செய்துள்ளதால் அவற்றின் விலையும் குறைகிறது.
10. எக்ஸ்ரே இயந்திரங்கள்: மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை , பல் மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தக்கூடிய எக்ஸ்ரே இயந்திரங்களின் விலை குறையும்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்:
1. அமோனியம் நைட்ரேட்: இதன் மீதான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அமோனியம் நைட்ரேட் சார்ந்த பொருட்கள் விலை உயரும்.
2. பிளாஸ்டிக்: மக்காத பிளாஸ்டிக் மீதான வரியும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயரும்.
3. சில தொலைதொடர்பு உபகரணங்களில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. குடைகள்: தோட்டங்களில் பயன்படுத்தப்படும் குடைகளுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
5. ஆய்வக ரசாயனங்கள்: ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ரசாயனங்களின் விலை அதிகரிக்க உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications