இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக முதலீட்டு சந்தையில் பெரும் தடுமாற்றம் பதிவாகியுள்ளது, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளின் வர்த்தகம் பாதித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய முதலீடுகளை காப்பாற்றும் வகையில் தங்கம் மீதும், கச்சா எண்ணெய் மீதும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதன் வாயிலாக இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து தங்க நகை வாங்குவோரின் கனவை உடைத்துள்ளது. குறிப்பாக இந்த பண்டிகை காலத்தில் தங்கம் வாங்க திட்டமிட்ட அனைவரின் கனவிலும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் மண்ணை போட்டு உள்ளது.

இதேபோல் கருப்பு தங்கம் என செல்லமாக அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலை இன்று காலை ஆசிய வர்த்தகத்தில் ஒரு பேரலுக்கு கிட்டதட்ட 3 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதேபோல் மத்திய கிழக்கு நாடுகள் ஹமாஸ் அமைப்பின் ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுமாற்றத்திற்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா உயர்ந்து 83.23 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1832.60 டாலர் அளவில் இருந்த நிலையில் இன்று, 1852 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் உச்ச விலை நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் எம்சிஎஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.04 சதவீதம் உயர்ந்து 57,460.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.24 சதவீதம் 69,017.00 ரூபாயாக உள்ளது. ஆனால் ரீடைல் சந்தையில் தங்கம் விலை காலை நேரத்தில் குறைந்துள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 53,650 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 58,530 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,920 ரூபாயாக உள்ளது.
மேலும் உள்நாட்டு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் அதிகரித்து 75,500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 190 ரூபாய் அதிகரித்து 23,620 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications