சர்வதேச சந்தையில் தங்கம் விலை திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் தடாலடியாக உயர்ந்தாலும், மதிய வர்த்தகத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக மாலை அமெரிக்க வர்த்தக சந்தை துவங்கியதில் இருந்து அதிரடியாக குறைந்து வருகிறது.
அமெரிக்க வர்த்தக சந்தையில் சுமார் 4.5 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 4550 டாலரில் இருந்து 4330 டாலர் அளவில் வர்த்தகமானது. கடந்த வார இறுதியில் புதிய உச்சத்தை தொட்ட பிறகு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மற்றும் டிரம்ப் ஜெலென்ஸ்கி மத்தியான அமைதி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தாக அறிவித்தார் இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடுகளுக்கு அவசியம் இல்லாமல் போனது. இதன் எதிரொலியாக தங்கம், வெள்ளி மீதான முதலீடுகளை லாபத்திற்கு விற்கும் நோக்கில் முதலீட்டாளர்கள் விற்று வருகின்றனர்.

வெள்ளி விலையும் தங்கத்தை போல கடும் சரிவை சந்தித்தது. ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 9.34 சதவீதம் குறைந்து 70.54 டாலர் அளவுக்கு சென்றது. காலை வர்த்தகத்தில் 84 டாலர் வரை உயர்ந்திருந்தது. கடந்த சில மாதங்களில் அதிரடியாக உயர்ந்த விலை இன்று பெரும் திருத்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர் சற்று வலுவடைந்தது இந்த சரிவுக்கு மற்றொரு காரணமாகும். டாலர் வலுவடையும் போது தங்கம் மற்ற நாடுகளுக்கு வாங்க அதிக செலவாகிறது. ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் தங்களது பொசிஷன்களை சரிசெய்வதாலும் டாலர் வலுவடைந்துள்ளது. 2025இல் தங்கம் சிறப்பாக செயல்பட்டதால் லாப எடுக்கும் நோக்கத்திற்காக விற்பனை அதிகரித்துள்ளது.
இது தங்கம், வெள்ளிக்கு குறுகிய கால சரிவாகவே பார்க்கப்படுகிறது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு சாதகமாகும். புவிசார் அரசியல் பதற்றமும் தங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பு சொத்தாக நிலை நிறுத்தும்.
உக்ரைன் போர், சீனாவின் தைவான் அருகே ராணுவ நடவடிக்கை, நைஜீரியா மீதான அமெரிக்க நடவடிக்கை ஆகியவை பதற்றத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய நிச்சயமற்ற நிலைகள் தங்கத்தின் தேவையை தொடர்ந்து ஆதரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் விலை சரிவை தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் வாய்ப்பாக பார்க்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications