சென்னையில் ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தங்கம் பெரிய அளவில் உயராமல் இருந்த நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் 12,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 12,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை தனது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவிட்டது. சென்னையில் நேற்று 96, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று 1600 ரூபாய் விலை உயர்ந்து 98,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . 10 கிராம் தங்கம் 2000 ரூபாய் விலை உயர்ந்து 1, 22,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 13,364 ரூபாய்க்கும் ஒரு சவரன் 10 கிராம் 1,33,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் தடாலடியாக உயர்ந்திருக்கிறது . ஒரு கிராம் 10,230 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை சரிவடைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்திருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக 12,200 ரூபாயாக அக்டோபர் 17ஆம் தேதி வரலாற்று உச்சத்தை தொட்டது . அதன் பிறகு குறைந்து வந்த தங்கம் விலை இன்று வரலாற்றிலேயே இல்லாத அளவாக 12 , 250 ரூபாய் என உச்சத்தை எட்டி இருக்கிறது . இந்த ஆண்டின் உச்சபட்ச விலையே இதுதான். ஒரு சவரனும் 98,000ஐ நெருங்கிவிட்டது. இதே அளவு விலை உயர்வு நீடித்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்கிறது. ஒரே நாளில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிலோ வெள்ளி 6 ,000 ரூபாய் விலை உயர்வு கண்டு 2,15,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . வெள்ளியை பொருத்தவரை இந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 17 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 17,000 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
தங்கமும் வெள்ளியும் இப்படி மாறி மாறி விலை உயர்வது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கம் விலை கிட்டதட்ட சவரன் 1 லட்சத்தை நெருங்கிவிட்டது. அதே வேளையில் வெள்ளி ஒரு கிலோ 2 லட்சத்தை கடந்து அடுத்த இலக்கை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டியை குறைத்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலை உயர்கிறது. வெள்ளிக்கான தொழில்துறை டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் விலை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications