சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச காரணிகள் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக இருக்கின்றன. சென்னையில் தொடர்ந்து 5ஆவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்து சாமானிய மக்களை கண்ணீர் வடிக்க செய்துள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,800 ரூபாய் என இருந்தது. இன்றைய தினம் ஒரு கிராம் 13,280 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் 110 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வரலாற்று உச்சமாக இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,06,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 480 ரூபாயும் ஒரு சவரன் 3,840 ரூபாயும் உயர்வு கண்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதியுடன் ஒப்பிட்டால் ஒரு கிராம் தங்கம் 840 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 6,720 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரத்துடன் பார்த்தால் ஒரு சவரனுக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்றால் மக்கள் 1.25 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.
சென்னையில் 24 கேரட் தங்கமும் கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,488 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,15,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 11,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் 800 ரூபாய் உயர்ந்து 88,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 300 ரூபாயை கடந்துவிட்டது. ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 292 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 307 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 15,000 ரூபாய் விலை உயர்வு கண்டு 3,07,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கடந்த 4 வர்த்தக நாட்களில் மட்டும் கிராமுக்கு 39 ரூபாயும் கிலோவுக்கு 39,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்க அரசின் பணவீக்க விகித தகவல்கள் வெளியான நிலையில் மேலும் வட்டியை குறைக்க வேண்டும் என டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஈரான் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராவதாக சொல்லப்படுகிறது. இந்த காரணிகள் அனைத்துமே முதலீட்டாளர்களை தங்கம், வெள்ளியின் பக்கம் திருப்பியுள்ளன. இதனால் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications