தங்கம் என்ற விலையுயர்ந்த உலோகம், வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான உலோகம். நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
இப்படி நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள அபார நம்பிக்கையால், மக்கள் தங்களது முதலீடுகளையும் தங்கத்தில் செய்து வருகின்றனர்.
அது வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைக்கின்றனர். தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வரும் நிலையில், பேப்பர் தங்கங்கள் ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக பார்க்கின்றனர்.

அரசின் பாதுகாப்பான திட்டம்
அதுவும் அது அரசின் திட்டம் என்றால் வேண்டாம் என்றா கூற முடியும். நிச்சயம் இல்லை. சரி வாருங்கள் எப்போது முதல் கொண்டு முதலீடு செய்யலாம். மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். அரசின் இந்த திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டமாக இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது.

இது ஜாக்பாட் காலம்
தங்கத்தின் மீது உள்ள தீரா மோகம் உள்ளவர்களுக்கு இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தினை தொட்டது. எனினும் தற்போது பரவி புதிய கொரோனா பரவல் காரணமான, இன்னும் விலைக் அதிகரிக்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இத்தகைய நேரத்தில் அரசின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும்.

சிறந்த முதலீடு
சர்வதேச சந்தையானலும், இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை ஏற்றத்தில் தான் உள்ளது. அதோடு நிபுணர்களும் நிச்சயம் ஏற்றம் காணும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது நாளை (டிசம்பர் 28) அன்று தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

கடைசி தேதி என்ன?
ஒன்பதாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி ஜனவரி 1, 2021 ஆகும். அதன் பிறகு ஜனவரி 5, 2021 இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை நிர்ணயம்
இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 5,000 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 4,950 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?
பொதுவாக ஒருவரி ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

எப்போது ஆரம்பம்?
இந்த தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம் 2015ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது மொத்தம் 9.14 லட்சம் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு 245 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது முதலீட்டாளர்களும் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிணையமாக வைத்து கடன் பெறலாம்
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.

எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 9
சந்தா தேதி டிசம்பர் 28 - ஜனவரி 1, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 05, 2021
சீரிஸ் 10
சந்தா தேதி ஜனவரி 11 - ஜனவரி 15, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 19, 2021
சீரிஸ் 11
சந்தா தேதி பிப்ரவரி 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி பிப்ரவரி 9, 2021
சீரிஸ் 12
சந்தா தேதி மார்ச் 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி மார்ச் 9, 2021
தங்க ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது நல்ல லாபத்தினையும் கொடுக்கும். செலவினையும் குறைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வட்டியும் உண்டு.