உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலம் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால், தங்கம் வாங்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,14,000-ஐ கடந்து, ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இதுதொடர்பாக முதலீட்டாளர் நரேஷ் கடாரியா கூறுகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணத்தை விளக்குகிறார். 2000-களில் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ETF நிதி பாய்ச்சல்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது இந்திய தங்கம் இறக்குமதி சீராக இருக்கும்போதும், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும்போதும் விலை உயர்ந்து வருவது ஆச்சரியத்தை தருகிறது" என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னணி செல்வ மேலாண்மை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, தங்கத்தில் 20% முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளது. மேலும், தங்கம் சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தங்கத்தின் இந்த விலை உயர்வுக்குப் பின்னால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மத்திய வங்கிகளின் தங்கம் கொள்முதல் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நகை வியாபாரிகள் தங்கத்தின் விலை குறைய வேண்டும் என நினைக்கின்றனர். தங்கள் இருப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவர்கள் தங்கத்தில் குறுகிய வர்த்தகம் செய்வதாக கடாரியா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், விலையேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சிப்பது, சந்தையின் விசித்திரமான மனநிலையை காட்டுவதாகவும் அவர் கருதுகிறார். கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 45% உயர்ந்துள்ள நிலையில், இது மேலும் உயரும் என கூறியுள்ளார்.
வெள்ளி விலையும் உயர்வு : தங்கம் மட்டுமின்றி, வெள்ளியின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து கடாரியா கூறுகையில், தனது முதலீட்டில் வெள்ளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய வங்கிகளும் இப்போது வெள்ளியை வாங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், வெள்ளிச் சந்தை தங்க சந்தையை விட மிக சிறியதாக இருப்பதால், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது நல்லது என்று அவர் பரிந்துரைக்கிறார்.


Click it and Unblock the Notifications