இந்தியச் சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறி வரும் காரணத்தால் ரூபாய் மதிப்பில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையிலும், மும்பை பங்குச்சந்தையில் கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிப்புகள் மூலம் அதிகளவிலான தடுமாற்றங்களை அடைந்து வரும் காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இவ்விரு காரணத்தாலும் தங்கம் விலையில் கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் சரிவு ஏற்பட்டு இருந்த நிலையிலும் இந்திய ரூபாய் மதிப்பில் உருவான சரிவு பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
இந்தச் சூழ்நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலையின் நிலவரம் என்ன தெரியுமா..?
எம்சிஎக்ஸ் தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை 0.33 சதவீத சரிவை அடைந்துள்ளது. ஜூன் மாதத்திற்கான ஆர்டர் விலை இன்று சரிந்துள்ள காரணத்தால் ரீடைல் சந்தையிலும் கணிசமான தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று MCX வர்த்தகச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 47,236 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் MCX சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 0.27 சதவீதம் சரிந்து 68,141 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அடுத்தச் சில வாரத்தில் 1800 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வர்த்தகம் துவங்கிய முதல் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லாமல் தொடர்ந்து 1,771 டாலர் முதல் 1,766 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யும் முக்கியக் காரணியாக இருக்கும் ரூபாய் மதிப்பு கணிசமான சரிவை அடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.23 ரூபாயில் இருந்து 74.57 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில், தற்போது 74.99 ரூபாயாகச் சரிந்துள்ளது.
இறக்குமதி தங்கம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது போல் தங்கத்தின் தேவையும் இறக்குமதி வாயிலாகத் தான் ஈடு செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று
மேலும் இந்தியாவில் தங்கம் மீதான முதலீட்டில் அதிகளவிலான பாதிப்புக்குக் கொரோனா தொற்றும் ஒரு காரணமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பங்குச்சந்தை மற்றும் பிற முதலீட்டுச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கம் மீது குவிகிறது. ஆனால் நேற்று வெளியான கொரோனா வேக்சின் அறிவிப்பு தங்க முதலீட்டு சந்தையைப் புரட்டிப்போட்டு உள்ளது. இதன் வெளிப்பாடு தான் MCX சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு.
9000 ரூபாய் விலை குறைவு
கடந்த ஆண்டுக் கொரோனா தொற்று உச்ச நிலையில் இருந்த போது முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்த போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 56,191 வரையில் உயர்ந்தது. இன்றைய MCX சந்தை விலையை ஒப்பிடுகையில் தங்கம் விலை தனது உச்ச விலையில் இருந்து கிட்டத்தட்ட 9000 ரூபாய் குறைவாகவே உள்ளது.
சென்னை ரீடைல் சந்தை விலை
இந்நிலையில் இன்று சென்னை ரீடைல் சந்தையில் ஒரு சவரன் தங்கம் விலை 32 ரூபாய் சரிந்து 35,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 30 ரூபாய் சரிந்து 48,580 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் சரிந்து 73,600 ரூபாய்க்குச் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications