இந்திய மக்களின் சுற்றுலா விருப்ப நகரமாகவும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நகரமாகவும் துபாய் தன்னை தக்க வைத்து கொண்டுள்ளது. வேலைக்காக துபாய் செல்ல கூடிய இந்தியர்கள் நிச்சயம் தாயகம் திரும்பும் போது தங்கம் வாங்கி கொண்டு வருவார்கள்.
துபாயில் இருந்து தங்கத்தை நகையாக மட்டுமே கொண்டு வர வேண்டுமா அல்லது தங்க கட்டி , தங்க காசாகவும் கொண்டு வர அனுமதி உண்டா , இவ்வாறு கொண்டு வரும் போது வரி செலுத்த வேண்டும் என பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. ஏனெனில் அண்மையில் தான் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை (Import Duty) 15% ஆக உயர்த்தியது. இதனால் இந்தியாவை விட இன்னும் குறைந்த விலைக்கே துபாயில் தங்கம் வாங்க முடியும்.

துபாய் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) இந்தியாவிற்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பயணிகள் தங்க காசு அதாவது தங்க நாணயங்களையும் தங்க கட்டிகளையும் கொண்டு வரலாம். அவ்வாறு வரும் போது விமான நிலையத்தில் இறங்கியவுடன், அதிகாரிகளிடம் முறைப்படி காண்பித்து டிக்ளேர் செய்து வரியைச் செலுத்த வேண்டும்.
வரி இல்லாத சலுகை என்பது அணிந்து கொள்ளும் தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் நீங்கள் குறைந்தபட்சம் 1 ஒரு வருடம் வெளிநாட்டில் வசித்திருக்க வேண்டும். பெண்கள் அதிகபட்சமாக 40 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வரி இல்லாமல் எடுத்து வரலாம். ஆண்கள் அதிகபட்சமாக 20 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வரி இல்லாமல் எடுத்து வரலாம்.
ஆனால் தங்க கட்டி, தங்க நாணயங்களுக்கு வரி உண்டு. வெளிநாட்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தங்கியிருந்த ஒரு இந்தியர், வரியைச் செலுத்திவிட்டு தங்க கட்டிகள் , நாணயங்களை கொண்டு வரலாம்.

எனவே துபாயில் இருந்து தங்க நகை, நாணயம், கட்டி என எதை வாங்கினாலும், நீங்கள் வாங்கிய தங்கத்திற்கான அசல் பில், அதன் தூய்மைக்கான சான்றிதழ் ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் சுங்க அதிகாரிகளிடம் காண்பித்து உரிய வரி செலுத்த வேண்டும்.
அதாவது துபாயில் தங்கக் காசுகள் மற்றும் கட்டிகள் வாங்குவது லாபம், ஆனாலும் அதை இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது முதல் கிராமில் இருந்தே வரி செலுத்த வேண்டும். வரி விலக்கு என்பது குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்ட தங்க நகைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
எனவே இந்தியாவை விட துபாயில் 10% வரை குறைவான விலைக்கே தங்கம் கிடைக்கிறது, அதனை வாங்கினால் நமக்கு லாபம் தான். ஆனால் அதனை சட்டப்படி இந்தியாவுக்கு கொண்டு வருவதில் உள்ள விதிகளை தெரிந்து கொண்டு தான் வாங்க வேண்டும். இல்லை என்றால் தண்டமாக வரி செலுத்த வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications

