பொதுவாக போர் பதற்றம் ஏற்பட்டாலே தங்கத்தின் விலை வேகமாக உயரும். ஆனால் ஈரான் போரில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலக அளவிலும், சரி இந்தியாவிலும் சரி தங்கத்தின் விலை பெருமளவில் சரிவை கண்டது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன, அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. எனவே முதலீட்டாளர்கள் தங்கம் வெள்ளியை விடுத்து அமெரிக்க டாலரிலும் கச்சா எண்ணெயிலும் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கினர். ஈரான் போர் தீவிரமடைய தீவிரமடைய தங்கத்தின் விலை குறைந்த வண்ணமே இருக்கிறது.

இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்த அவர் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது இதுவரை இல்லாத அளவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை நரகமாகிவிடும் என மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்பின் இந்த எச்சரிக்கை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் தரப்போ தாக்குதலை தொடர்வோம் என பதிலடி தந்துள்ளது. இதனால் மேற்காசியா போர் மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது. டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து தொடக்க வர்த்தக நேரத்தில் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. அதாவது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.7 சதவீதம் வரை சரிவடைந்து 4610 டாலர்களாக வர்த்தகமாகியது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை 12 சதவீதம் குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, பணவீக்கம் அதிகரித்தது, பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்ந்ததுமே இதற்கு முக்கிய காரணம். ஏனெனில் முதலீட்டாளர்கள் பலரும் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெயிலும் அமெரிக்க டாலரிலும் அதிகமாக முதலீடு செய்தார்கள்.
இந்த நிலையில் ஈரான் மீது இதுவரை இல்லாத தாக்குதலை நடத்துவோம் என்ற டிரம்பின் அறிவிப்பு உலக சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெயின் விலையை 1.27% உயர்த்தியுள்ளது அதாவது ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 110.43 டாலர்களாக உள்ளது. இது தங்கம் , வெள்ளி விலையை சரிவடைய செய்திருக்கிறது. காலை 7:30 மணியளவில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் சுமார் 48 டாலர்கள் சரிவடைந்தது அதாவது 1 சதவீதத்திற்கு மேல் குறைந்து 4628 டாலர்களுக்கும் வெள்ளியின் விலை 1.45 சதவீதம் சரிவடைந்து 71.93 டாலர்களுக்கும் வர்த்தகமாகி வருகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும். எனவே இன்றைய தினம் இந்தியாவில் சங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தாறுமாறாக குறையும். தங்கம், வெள்ளி வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்றைய தினம் குறைய போகின்றன என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications