இந்தியக் குடும்பங்களில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படும் போதே எப்போது நகை வாங்கலாம் என்ற பேச்சும் தொடங்க ஆரம்பித்து விடும். ஏனெனில் காலம் காலமாக திருமண சடங்கின் போது பெண்ணுக்கு சீர் செய்வதும், மாப்பிள்ளைக்கு நகை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் முகூர்த்த தேதிக்கு முன்னரே மோதிரம், தோடு வளையல்கள் போன்றவற்றை வாங்கி வைப்பார்கள்.
ஆனால் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஒரு புறம் நகை வியாபாரிகளைத் திக்கு முக்காட செய்துள்ளது. ஏனெனில் பிரதமர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார். முதல் முறை கடந்த மே மாதத்தில் அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தள்ளி வையுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தியா உலகிலேயே அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு நாம் டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். டாலருக்கான தேவை எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்திற்குச் சென்று விடும். இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த கோரிக்கையை விடுத்தார். இப்போது மீண்டும் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு கூறியுள்ளார்..

இந்தியப் பிரதமரே தொடர்ந்து கோரிக்கை வைப்பதால் நகை வர்த்தகத்தில் குறைவு ஏற்படும் என்று சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நகை செய்பவர்களிடையே பெரும் கவலை எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் தங்க நுகர்வு 800 டன்னிலிருந்து 500 டன்னாக குறைந்து விடும் என்று சேம்பர் ஆஃப் டிரேட் & இண்டஸ்ட்ரி நிறுவனம் கணித்துள்ளது.
நகை வியாபாரிகளின் இந்த கவலைக்கு என்ன காரணம்?: உலகிலேயே தங்க நுகர்வோரில் முன்னணி வகிக்கும் நாடு சீனா. அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 700 முதல் 800 டன் வரை தங்கம் பயன்படுத்தப்படுகிறது. பிரதமரின் கோரிக்கையால் எண்ணிக்கை 500 டன்னாகக் குறைய வாய்ப்புள்ளது. அதுவும் இந்த கோரிக்கை வந்த நேரமும் நகை விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் திருமணம் சீசனாக இருக்கும். இந்த மாதங்களில் நிறைய முகூர்த்த தேதிகள் வரும். இதனால் மக்களும் தங்களுடைய திருமண தேவைக்காக நகை வாங்க தொடங்குவார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பாலும் தங்கத்தின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பாலும் மக்கள் நகை வாங்குவதை தவிர்த்து விடுவார்கள் என்ற கவலை நகை விற்பனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வியாபாரிகளுக்கு ஏற்பட்ட அழுத்தம்: ஏற்கனவே மே மாதம் பிரதமர் மோடியின் முதல் கோரிக்கைக்குப் பிறகு சிறு உற்பத்தியாளர்களின் வியாபாரம் 60 முதல் 70% வரை சரிந்தது. விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் பெரிதாக நகை வாங்காமல் இருந்தனர். இதனால் பல சில்லறை விற்பனையாளர்கள் புதிய நகைகள் வாங்கி வைப்பதையும் நிறுத்தி இருந்தனர். இந்த மந்த நிலை மீண்டும் எழுந்து விடுமோ என்ற பயம் தான் தற்போது சிறு நகை வியாபாரிகளுக்கு எழுந்துள்ளது. பெரிய நகை பிராண்டுகளை விட வழக்கமான வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பி இருக்கும் நகை கடைகளுக்கு தான் இதனால் அதிக அழுத்தம் ஏற்படும் என்று சேம்பர் ஆஃப் டிரேட் & இண்டஸ்ட்ரி கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications
