நகைக்கடைக்காரர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து குறைந்த தேவை காரணமாக செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகர் டெல்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.90,450 க்கு விற்பனையானதாக அகில இந்திய Sarafa சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை 10 கிராமுக்கு ரூ.90,550 ஆக இருந்த தங்கம் விலை, நேற்று ரூ.100 குறைந்து ரூ.90,450 க்கு விற்பனையானது. இது தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு மற்றும் டிரெஷரி ஈல்டுகள் அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்தது. மேலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிகள் (Tariffs) எதிர்பார்த்த அளவிற்கு கடுமையாக இருக்காது என்ற அறிகுறிகளை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதாக HDFC செக்யூரிட்டீஸின் மூத்த பொருட்கள் பகுப்பாய்வாளர் சௌமில் காந்தி தெரிவித்தார்.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது, திங்கட்கிழமை கிலோவுக்கு ரூ.1,00,500 இலிருந்து ரூ.500 குறைந்து ரூ.1,00,000 க்கு விற்பனை ஆகிறது. இதற்கிடையில், சர்வதேச சந்தைகளில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 12.56 டாலர் அல்லது 0.42 சதவீதம் அதிகரித்து 3,023.60 டாலராக உள்ளது. இதனால், உள்நாட்டுச் சந்தையில் தங்கம் குறைந்தாலும், சர்வதேச சந்தையில் சிறிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் தற்போது 3,020 டாலர் ஒரு அவுன்ஸிற்கு வர்த்தகமாக உள்ளது. வர்த்தகர்கள், அமெரிக்காவின் அடுத்த கட்ட வரிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், முழுமையான வர்த்தகப் போர் ஏற்படாது என்ற எதிர்பார்ப்பில் நிம்மதி அடைந்துள்ளனர் என்று Kotak Securities-ன் AVP-Commodity Research-ன் கெய்னத் சைன்வாலா தெரிவித்தார். இருப்பினும், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இராணுவ பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது, வடக்கு காசாவில் மக்கள் வெளியேற்றத்தால் நிலவும் பதற்றம், மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிக அளவில் சரிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்று கெய்னத் சைன்வாலா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், LKP செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் நாணயத் துறையின் துணைத் தலைவர் ஜதீன் திரிவேதி கூறுகையில், இந்த வாரத்தில் முக்கிய பொருளாதார தரவுகள், குறிப்பாக அமெரிக்காவில் பணவீக்க அளவை வெளிப்படுத்தும் முக்கியமான குறியீடு மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நிலை ஆகியவை சந்தையின் எதிர்கால இயக்கத்திற்காக கவனமாக கண்காணிக்கப்படும் என்றும் மொத்தத்தில், இந்த தரவுகள் வெளியான பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் சந்தை மதிப்பு துல்லியமாகத் தெரிய வரும் என்றும் பிடிஐ செய்தியிடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications