கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சி, பல முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 24 மாதங்களில் 100% வளர்ச்சியும், 2020ஆம் ஆண்டில் இருந்து 200% வளர்ச்சியும் கண்டுள்ளது. சர்வதேச சந்தையை பொறுத்தவரை 2023 அக்டோபரில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,900 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இன்று 3,860 டாலர் என்ற உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவிலும் 2023 அக்டோபரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.61,000 ஆக இருந்தது. ஆனால் இன்று, 10 கிராம் (24 காரட்) தங்கம் ரூ.1,17,290 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஓராண்டில் தங்கம் 45%-க்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு மட்டும் 47%-க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைகள் வடிவில் தங்கம் வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இதில் சில கூடுதல் செலவுகளும் உள்ளன. நீங்கள் நகை வாங்கும்போதும், அதை மீண்டும் விற்கும்போதும் 5% முதல் 25% வரை சேதாரம் மற்றும் பணமாக மாற்றும் செலவுகளும் உள்ளன. எனவே, நகைகள் மூலம் பணம் சேமிப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்.
ETF-களின் முக்கிய நன்மைகள் : நகைகளுக்கான அதிக சேதாரம் போல் அல்லாமல், தங்க ETF-களின் செலவு விகிதம் வெறும் 0.8% என்ற அளவிலேயே இருக்கும். டிமேட் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் செலவுகள் இருந்தாலும், இது நகைகள் வாங்கும் செலவை விட மிக மிக குறைவு தான். ETF-கள் நேரடியாக தங்கத்தின் விலையை துல்லியமாக பிரதிபலிக்கும் என்பதால், விலையில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்கும். அதேபோல் தங்கத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் சேமிப்பை பற்றிய கவலைகள் இதில் கிடையாது.
டிமேட் கணக்கு : உங்களிடம் டிமேட் கணக்கு இல்லையென்றால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் Gold Fund of Funds (FoFs) என்ற திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த FoF-கள், அதே நிறுவனத்தின் தங்க ETF-களில் முதலீடு செய்வதால், டிமேட் கணக்கு இல்லாமல் கூட நீங்கள் பலனை பெற முடியும். இன்று சந்தையில் 21 தங்க ETF-கள் உள்ளன. சந்தையில் பல ETF-கள் இருந்தாலும், அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் ETF-ஐ தேர்ந்தெடுப்பது சிறந்தது.
சிறிய முதலீடு : தங்க ETF-களை ஒரு கிராம் அளவில்கூட வாங்கிக் கொள்ளலாம். 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,17,290 என்றாலும், நீங்கள் ரூ.500 போன்ற சிறிய தொகையில் கூட சேமிப்பை தொடங்கிக் கொள்ள முடியும்.
கவனிக்க வேண்டியவை : தங்கம் விலை தற்போது உச்சத்தில் இருப்பதால், உங்கள் மொத்த முதலீட்டில் 5% முதல் 10% வரை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். தங்கத்தின் விலை குறையும்பட்சத்தில் நீங்கள் அதில், கூடுதல் ஒதுக்கீடு செய்யலாம். நீண்ட கால நிதி இலக்குகளை அடைய தங்க ETF-கள் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications