இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு தங்கம் என்பது ஆடம்பரமான விஷயம் என்பதை தாண்டி முக்கிய சேமிப்பு கருவியாகவே இருக்கிறது, இதனால் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாடுகள் அரசும், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் வேளையில் இந்திய மக்கள் ரீடைல் சந்தையில் வாங்கி வருகின்றனர். தங்கமும், மக்களின் முதலீட்டு பழக்கமும் பின்னிப்பிணைந்து இருக்கும் வேளையில் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தால் என்ன நடக்கும்.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு உள்ள தரவுகளின்படி, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் ஒவ்வொரு வருடமும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் தங்க இறக்குமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் எப்போதும் இல்லாத வகையில் 24.15 சதவீதம் குறைந்து 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

2021-22 ஆம் நிதியாண்டில் இந்திய மக்களும், வியாபாரிகளும் சுமார் 46.2 பில்லியன் டாலர் மத்திப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்த நிலையில், அடுத்த வருடம் தங்க இறக்குமதியில் 24.15 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 2022 முதல் 2023 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் தான் தங்கத்தின் இறக்குமதி பெரிய அளவில் குறைத்துள்ளது. சொல்லப்போனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த குறிப்பிட்ட காலத்தில் பெரிய அளவிலான வித்தியாசம் பதிவாகியுள்ளது.
ஆனால் மார்ச் 2023 இல் இந்தியாவில் 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்தில் வெறும் 1 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் கடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி 6.12 சதவீதம் அதிகரித்து 5.29 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் மீதான அதிக இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, தங்கத்தின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் தான் நாட்டின் தங்க இறக்குமதியும், ரீடைல் தங்க நகை விற்பனையும் சரிந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அளவீட்டில் ( நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இடையே உள்ள வித்தியாசம்) தங்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்படும் வேளையில் 2022-23 ஆம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு வர்த்தக பற்றாக்குறை அளவீட்டை குறைக்க உதவவில்லை என்பது தான் உண்மை.

2022-23 ஆம் ஆண்டில் வணிகப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 267 பில்லியன் டாலராக உள்ளது. முந்தைய ஆண்டில் இது 191 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் உட்பட பிற முக்கிய பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் வர்த்தகப் பற்றாக்குறை அளவு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications