தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் இந்திய மக்கள் வாங்குவார்கள் என்பதற்கு இந்த வருடம் சரியான உதாரணமாக உள்ளது. உலக நாடுகளில் நிலவும் போர் பிரச்சனை காரணமாக இந்தியாவில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது.
ஆனாலும் 2023-24 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 26.7 சதவீதம் அதிகரித்து 35.95 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி 28.4 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 156.5 சதவீதம் அதிகரித்துச் சுமார் 3 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த தங்கத்தில் சுமார் 41 சதவீத தங்கம் சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. சுவிஸை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தில் 13 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் மதிப்பீட்டளவில் சுமார் 5 சதவீத பங்கீட்டை தங்கம் மட்டுமே வைத்துள்ளது. ஆனால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை பார்த்தால் நாட்டு மக்கள் தொகையில் மிகவும் குறைவு என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தற்போது 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவீட்டை ஒவ்வொரு நாளும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இந்த ஆண்டு அதிகப்படியான டிமாண்ட் காரணமாக, மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தங்கம் இல்லாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 99 சதவீதம் பிற நாணயங்களால் பணம் செலுத்தப்படும் காரணத்தாலும், தங்கத்தின் மதிப்பு நாட்டின் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் ஏற்கனவே அதீத கச்சா எண்ணெய் இறக்குமதியால் பாதிக்கப்பட்டு உள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டைத் தங்கம் கூடுதலாகப் பாதித்துள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்திருந்தாலும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு இந்த 9 மாத காலகட்டத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது தான்.
2022 ஏப்ரல் - டிசம்பர் காலக்கட்டத்தில் 212.34 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு, 2023ல் 188.02 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக தங்க இறக்குமதி செய்த நாடாக இந்தியா விளங்குகிறது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் செலவழிக்கும் பணத்தின் வித்தியாசம், வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு என்பது ஒரு நாட்டின் ஏற்றுமதியை விடவும் இறக்குமதி அதிகமாக இருப்பதைக் காட்டும் அளவீடு.


Click it and Unblock the Notifications