சென்னை: தங்கம் என்பது இந்திய கலாச்சாரத்தில் மதிப்புமிக்க உலோகமாகப் பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கும் சின்னமாக தங்கம் உள்ளது. தங்கம் வாங்குவது என்பது முதலீடு மட்டுமல்லாமல், பண்டிகை காலங்களில் அணியும் அணிகலன்களாகவும் உள்ளதால், தங்கம் வாங்குவது என்றால் பெண்களுக்கு ஒரே குஷிதான். ஆனால், தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் எது என்பது குழப்பமளிக்கும் கேள்வியாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் தங்கம் வாங்குவது சிறந்த முடிவாக இருக்குமா என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தை தொட்டு வருகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் தோராயமாக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,300 முதல் ரூ.8,000 வரை இருந்தது. புதிய அரசாங்கம் பதவி ஏற்பதும், புதிய கொள்கைகள் அமல்படுத்துவதும் தங்கத்தின் விலையை நிச்சயமாக உயர்த்தும் என்பதால், இது தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கத்தின் மதிப்பு சீராக உயர்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பார்க்கும்போது, 2023 ஆம் ஆண்டில் 83 சதவீதம் முதல் 103 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று காலத்திற்கு அடுத்தபடியாக அதிக உயர்வாகும்.
தங்கத்தின் தனித்துவமான நிறமும் மின்னும் தன்மையும் மற்ற உலோகங்களை விட தனிச்சிறப்பு அளிக்கிறது. பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக தங்கம் கருதப்படுகிறது.
பொருளாதார சவால்கள்: உலகளவில் நிலவும் பொருளாதார சவால்கள் காரணமாக பங்குச் சந்தைகள் நிலையற்ற தன்மையுடன் காணப்படுகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர். இது தங்கத்தின் தேவை அதிகரிப்பிற்கு வழிவகுத்து, விலை உயர்வுக்கு காரணமாகலாம்.
தங்கம் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை:
புதிய அரசாங்கத்தின் கொள்கைகள்: இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ளன. அரசாங்கம் தங்க இறக்குமதியில் ஏதேனும் மாற்றங்கள், வரிகளில் திருத்தங்கள் செய்யும் சாத்தியம் உள்ளது. இது தங்கத்தின் விலையை பாதிக்கும்.
பண்டிகை கால தேவை: இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும். தீபாவளி வர இருப்பதால் இது போன்ற காரணிகளையும் கவனிக்க வேண்டும்.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்: தங்கத்தின் விலை சர்வதேச சந்தையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே, தங்கம் வாங்குவதற்கு முன்பு சந்தையின் போக்கை கவனிப்பது அவசியம்.
தங்கம் வாங்குவதற்கு சிறந்த நேரம் எது என்று பார்த்தால், அதனை நாம் ஒரே ஒரு விடையை வைத்து சொல்ல முடியாது. ஏனென்றால் பொருளாதார நிலவரம், அரசியல் கொள்கைகள் மற்றும் தனிப்பட்ட தேவை ஆகியவற்றை பொறுத்து இது மாறுபடலாம். தற்போது, பொருளாதார சவால்கள் மற்றும் பண்டிகை கால தேவை காரணமாக தங்கத்தின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் விலை குறையவும், ஏற்கனவே உயர்ந்திருக்கும் விலையில் இருந்து மேலும் உயரவும் சாத்தியம் உள்ளது. எனவே, தங்கம் வாங்குவதற்கு முன்பு சந்தையை நன்கு ஆராய்ந்து, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.


Click it and Unblock the Notifications