2024ம் ஆண்டில் தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம், இந்த ஆண்டில் அதிகம் லாபம் கொடுத்த முதலீடுகளை ஆய்வு செய்யும் போதும் தங்கம் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பொதுவாக தங்கம் மெதுவாக மற்றும் நிலையாக உயரும் ஒரு சொத்து.
ஆனால் இந்த ஆண்டு அப்படியில்லை, தங்கம் தாறுமாறாக லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தங்கம் மீதான முதலீட்டுக்கு சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான லாபம் கிடைத்துள்ளது. இது நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் போன்ற இந்திய பங்குச் சந்தை குறியீடுகளின் 12% லாபத்தை விட அதிகம் என்பது தான் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் ஈட்டிய லாபத்தையும் இந்த ஆண்டு முறியடித்துள்ளது. இதனால் இந்திய மக்கள் மத்தியில் தங்கம் முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, உலகின் பல இடங்களில் நிலவிய போர் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கியது, உலகளாவிய பொருளாதார சவால்கள் ஆகியவை தங்கத்தின் தேவையை தொடர்ந்து அதிகரிக்க செய்து அதன் விலையை உயர்த்தியது.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர் வலுவடைவதும், கிரிப்டோகரன்சிகளின் ஆதிக்கம் அதிகரிப்பது வருடத்தின் கடைசி மாதத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் 2025ஆம் ஆண்டிலும் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எல்.கே.பி. செக்யூரிட்டீஸின் ஜாதீன் திரிவேதி கூறுகையில், தங்கத்தின் லாபம் வைப்புத்தொகை (6%) மற்றும் பத்திரங்கள் (7-8%) ஆகியவற்றின் லாபத்தையும் முந்தியுள்ளது என சுட்டிக்காட்டினார். இந்த வலுவான போக்கின் மூலம் ஜே.எம். பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பண்டுகள் மற்றும் கரன்சி ஆராய்ச்சி துணைத் தலைவர் பிரணவ் மேர் நிர்ணயித்த 10 கிராமுக்கு ரூ.75,000 என்ற இலக்கை தாண்டியுள்ளது.
தங்கம் மீதான முதலீட்டுக்கு இந்திய சந்தையில் 20% ஐ விட அதிகமாகவும், சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 27% ஆகவும் லாபத்தை பதிவு செய்துள்ளது, இதன் மூலம் 2024ஆம் ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாபெரும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
தங்கம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக லாபத்தை அளிக்கிறது, மேலும் 2024 ஆம் ஆண்டில் ஆரம்பகட்ட லாப எதிர்பார்ப்பு என்பது 12-14% ஆக இருக்கும் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீதம் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. கமாடிட்டி பிரிவில் தங்கம் தொடர்ந்து இயற்கை எரிவாயு மற்றும் வெள்ளி ஆகியவை முதல் 3 இடத்தை பிடித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் சராசரியாக தங்க விலை கடந்த ஆண்டை விட 25% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளை பார்க்கும் போது, 2023 ஆம் ஆண்டில் 15% லாபம் ஈட்டியது, 2022 ஆம் ஆண்டில் 14.38% லாபம் ஈட்டியது. 2021 ஆம் ஆண்டு 4.09% லேசான வீழ்ச்சியை கண்டாலும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 24.59% மற்றும் 28.24% என கணிசமான விலை உயர்வுடன் காணப்பட்டன.


Click it and Unblock the Notifications