இந்தியர்கள் ஒரு அவசர பண தேவை என்றால் உடனே நாடுவது நகை கடன்களை தான். கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்தால் அரை மணி நேரத்தில் பணம் கைக்கு வந்துவிடும். வேறு எந்த ஒரு சொத்தையும் இத்தனை விரைவாக பணமாக்க முடியாது. அந்த வகையில் இந்தியாவில் மற்ற கடன்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் வந்து நிற்கிறது தங்க கடன்கள்.
இந்தியாவின் சில்லறை கடன் சந்தையில் தங்க கடன்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது சுமார் 4.4 மடங்கு அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன. 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்க நகை கடன்களின் அளவு 1.24 லட்சம் கோடியாக இருந்தது, அதுவே 2025இல் 2.06 லட்சம் கோடி ரூபாயாகவும், 2026 ஜூலை 5.52 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் காரணமாக பாதுகாப்பற்ற கடன்களான பெர்சனல் லோன்கள் பெறுவது குறைந்துள்ளது. அதே வேளையில் கோல்டு லோன் பெறுவது அதிகமாகியுள்ளது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அதிகமாக தங்க கடன்கள் தருவதற்கு முன்னுரிமை தருவது, குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது ஆகியவை இதற்கு ஒரு காரணம்.
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் நகையை அடகு வைத்தால் 60,000 ரூபாய் முதல் கடன் கிடைக்கிறது. மேலும் வட்டியும் குறைவு என்பதால் பொதுமக்கள் இதற்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதுவும் தென்னிந்திய மாநிலங்களீல் தான் இது அதிகம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் தான் மொத்த தங்க கடனில் 70% பங்களிப்பை கொண்டுள்ளன. இதிலும் தமிழ்நாடு 30 % பங்களிப்புடன் முதலிடத்திலும் ஆந்திரா 15.9 சதவீதம், கர்நாடகா 10.2 சதவீதம் என பங்களிப்பை கொண்டுள்ளன.
பாரம்பரியமாகவே தங்க கடன் சந்தையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தான் மிக முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அவசர தேவைகளுக்கும், வணிக மூலதனத்திற்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவதை ஒரு முக்கிய நிதி பழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தேசிய அளவில் தங்க கடன் வளர்ச்சி உயர்வதில் தமிழ்நாடு மற்றும் இதர தென்னிந்திய மாநிலங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
வங்கிகள், தங்க நகை கடன் வழங்குவதற்காகவே தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பெரு நகரங்களை தாண்டி சிறு நகரங்களிலும் கிளைகளை விரிவாக்கம் செய்து தங்க நகை கடன்களை எளிமையாக்கியுள்ளன. அது மட்டுமில்லாமல் நிதி நிறுவனங்கள் வங்கிகளுக்கு தங்க கடன்கள் மிக பாதுகாப்பானவை. க்டன் பணம் வரவில்லை என்றாலும் தங்கத்தை விற்று மீட்டு விடலாம்.
பொதுமக்களுக்கு விரைவாக பணம் கிடைக்கும், குறைந்த வட்டி, பெரிய அளவில் பேப்பர் வேலைகள் இல்லை, கிரெடிட் ஸ்கோர் பிரச்சினைகள் இல்லை என்பதால் தங்க நகை கடன்கள் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளன. மருத்துவ தேவை, திடீர் பண தேவை, தொழில் மூலதனம் என பலவற்றுக்கும் முக்கிய ஆதாரமாக தங்க கடன்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications


