இந்தியாவிலேயே தொழில் , உற்பத்தி, சேவை, பொருளாதாரம் என பல பிரிவுகளிலும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் தமிழ்நாடு. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக அளவு தங்க கடன் வாங்கிய மாநிலமாகவும் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவை கடந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்க நகை வாங்குவதற்கான ஆர்வம் குறைந்தது. ஆனால் தங்கத்தின் இந்த விலை உயர்வு மற்றொரு தொழிலுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. அதுதான் தங்க நகை கடன்.

தங்கத்தின் விலை உயர்ந்ததால் ஏராளமான மக்கள் மற்ற கடன்களை விட தங்க நகை கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் தர தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்குப் பிறகு தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கு என்பது அதிகரித்து இருக்கிறது.
குறிப்பாக இந்த ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் நிலுவையில் இருக்கக்கூடிய தங்க நகை கடன்களில் 75 சதவீத கடன்கள் தென்னிந்திய மாநிலங்களில் தான் இருக்கின்றன என்பதுதான் கூடுதல் தகவல். மொத்தமாக 18.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கடன் நிலுவையில் இருக்கக்கூடிய சூழலில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்களின் மட்டும் மார்ச் 2026 நிலவரத்தின்படி 13.94 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருக்கிறது.

அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் அதிகமான தங்க கடன் வாங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கக்கூடிய தங்க நகை கடனின் மதிப்பு 5.96 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அடுத்ததாக ஆந்திராவில் 3.08 லட்சம் கோடி ரூபாயும், கர்நாடகாவில் 1.81 லட்சம் கோடியும், தெலுங்கானாவில் 1.6 லட்சம் கோடி ரூபாயும் கேரளாவில் 1.45 லட்சம் கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள தங்க கடன்களின் மதிப்பாக உள்ளது.
தங்க நகைகளின் விலை உயர்ந்ததால் பொது மக்களை பொருத்தவரை தங்கள் கைகளில் இருக்கக்கூடிய தங்கத்திற்கு முன்பிருந்ததை விட தற்போது அதிக பணம் கடனாக கிடைக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்தவரை பாதுகாப்பான கடனாக தங்க கடன்கள் இருப்பதால் மற்ற கடன்களை விட தங்க நகை கடன்களுக்கு தான் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முன்னுரிமை தருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பிரிவாக தங்க நகை கடன் பிரிவு இருக்கிறது. ஓராண்டிலேயே இது 50% உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தனி நபர் கடன்கள் 12.9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன வீட்டு கடன்களை பொறுத்தவரை 9.4 சதவீதம் என ஒரு நிலையான வளர்ச்சியை காட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications

