பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வதா அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதா என்ற குழப்பம் இருக்கும். சாமானியர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வார்கள். ஆனால் எதிர்காலத்திற்கு எது நல்லது? என்பதை தீர்மானிக்க கோல்ட் சில்வர் ரேஷியோ உள்ளது. இதன் பொருள் என்ன? எதிர்காலத்திற்கு எது சரியான தீர்வு? என்பதையெல்லாம் இந்த பதிவில் பார்ப்போம்.
தங்கத்தையும் வெள்ளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வெள்ளியின் விலை தங்கத்தை விட குறைவானது தான். ஆனால் பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் என பல பிரச்சனைகளுக்கும் நடுவில் தங்கம் தான் பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. ஆனால் தங்கத்தை விட தொழிற்சாலைகளில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதால் கோல்ட் சில்வர் ரேஷியோ 70-ஆக அதிகரித்துள்ளது.

கோல்ட் சில்வர் ரேஷியோ என்றால் என்ன?: கோல்ட் சில்வர் ரேஷியோ என்பது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது என்பதை சொல்லும் ஒரு கணக்கீடு அவ்வளவுதான். தங்கத்தின் விலையை வெள்ளியின் விலையோடு வகுத்து பார்த்தால் இந்த விகிதம் தெரிந்துவிடும்.
ஜூலை 29ஆம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4080 டாலராக வர்த்தகமானது. அதேபோல வெள்ளி விலை 58 டாலராக இருந்தது.
கோல்ட் சில்வர் ரேஷியோ = 1 அவுன்ஸ் தங்கம் விலை / 1 அவுன்ஸ் வெள்ளி விலை = $4080/ $58 = 70.34:1
அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க 70.34 அவுன்ஸ் வெள்ளி தேவை.
ஆனால் ஜனவரியில் இந்த விகிதம் 50-ஆக இருந்தது. அதன் பின்னர் மே மாதம் 55-ஆகவும், ஜூன் மாதம் 67-ஆகவும் இருந்தது. இப்போது 70.34-ஐ எட்டியுள்ளது. அதாவது வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். 2025-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 1 கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் ஜூலை 29 ,நிலவரப்படி எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை 2,17,800 ரூபாய்க்கு மேல் வர்த்தகமானது. இதே நிலை தொடர்ந்தால் தங்கத்தின் விலைக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வெள்ளியின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்தால், டாலரின் மதிப்பும் குறைய தொடங்கும். அந்த நேரத்தில் தொழிற்சாலைகள் வெள்ளியை அதிகம் வாங்கும் போது வெள்ளியின் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஆனால் முதலீடாளர்கள் வெள்ளியின் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஒரு சில நிதி நிபுணர்கள், இனி வரும் காலத்தில் கோல்ட் சில்வர் ரேஷியோ 65 முதல் 75 வரை இருக்கும் என்று கணித்துள்ளனர்.
ஒருவேளை வட்டி விகிதம் குறைக்கப்பட்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும் சூழலில் வெள்ளிக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் தங்கத்தை விட வெள்ளியின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால்தான் தங்கம் மற்றும் வெள்ளை ஆகிய இரண்டிலும் பிரித்து முதலீடு செய்வது தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
