அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு இல்லையென அறிவித்த பின்பு, தங்கம் வெள்ளி விலையில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. நேற்றைய அமெரிக்க சந்தையில் பதிவான சரிவு இன்று ஆசிய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதன் மூலம் 5600 டாலருக்கு சென்ற ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5229 டாலருக்கு சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 119 டாலரில் இருந்து 111 டாலருக்கு சரிந்துள்ளது.
இந்த நிலையில் உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்ட அறிக்கை பல முக்கிய விஷயங்களை உணர்த்தியுள்ளது. குறிப்பாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்த பின்பு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புட்டு புட்டு வைத்துள்ளது.

2026ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்க தேவை குறையும் என WGC அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 11 சதவீதம் குறைந்த தங்கத்தின் தேவை இந்த ஆண்டும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக நகை வாங்குபவர்களை பாதித்துள்ளது. ஆனால் முதலீட்டுக்காக வாங்கப்படும் தங்கம் பட்டை, நாணயங்கள் வாங்குவது சற்று அதிகரித்துள்ளது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு (2025) இந்தியாவில் மொத்த தங்க தேவை 710.9 டன் ஆக இருந்தது. இது ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும். மேலும் 2026இல் தங்க தேவை 600 டன் முதல் 700 டன் வரை இருக்கலாம் என்று WGC ரிப்போர்ட் கூறுகிறது. இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் சமீபத்திய தொடர் தங்கம் விலை உயர்வால் பெரும்பாலானவர்கள் தங்கம் நகை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
2025இல் தங்க நகை வாங்குபவர்கள் மத்தியிலான தேவை 24 சதவீதம் குறைந்து 430.5 டன்னாக இருந்தது. இது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு (2020 கொரோனா ஆண்டைத் தவிர). ஆனால் முதலீட்டுக்காக வாங்கப்படும் தங்கம் பார் மற்றும் நாணயங்களின் தேவை 17 சதவீதம் உயர்ந்து 280.4 டன்னாக இருந்தது. இது 2013க்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும்.
இதன் மூலம் மொத்த தங்க தேவையில், முதலீட்டுக்காக வாங்கப்படும் தங்கத்தின் தேவை வரலாறு காணாத அளவாக 40 சதவீதமாக உயர்ந்தது, இது வழக்கமாக 25 சதவீதம் மட்டுமே இருக்கும். இதனால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதும், தங்கம் மீதான ஆர்வமும் விலை உயர்வால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தங்கத்தை நுகரும் வழி மட்டுமே மாறியுள்ளது.
தங்க விலை 2025இல் 76.5 சதவீதம் உயர்ந்தது. அதேநேரம் நிஃப்டி 50 குறியீடு 10.5 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. பங்குச் சந்தை சரியாக செயல்படாததால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்பினர். தங்க ETFகளில் முதலீடு 2025இல் 283 சதவீதம் உயர்ந்து ரூ.42,960 கோடியாக (4.67 பில்லியன் டாலர்) சாதனை அளவை எட்டியது. இப்படி இந்திய மக்கள் தங்கத்தை பார், காயினாக மட்டும் அல்லாமல் ETF வாயிலாகவும் முதலீடு செய்து பலன் அடைகின்றனர்.
இதேபோல் தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் பழைய நகை மற்றும் பார்களை விற்கும் அளவு 19 சதவீதம் குறைந்து 92.7 டன்னாக இருப்பதாக WGC ரிப்போர்ட் கூறுகிறது. இதற்கு காரணம் மக்கள் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்த்ததால் விற்காமல் வைத்திருக்கின்றனர்.
இதன் மூலம் இந்திய மக்கள் தங்கத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர், தங்கம் வாங்கலாம், ஆனால் நகையாக வாங்க கூடாது என்பதில் குறியாய் உள்ளனர். இதேபோல் பழைய தங்கத்தை விற்கும் எண்ணமும் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. இதனால் நகை கடைக்களுக்கு பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் 2026இல் தங்கம் விலை உயர்வு தொடர்ந்தால் நகை தேவை மேலும் குறையலாம், முதலீட்டு தங்கம் தேவை அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications