தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது - 'இப்போதே வாங்கலாமா அல்லது இன்னும் காத்திருக்கலாமா?' என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண குடும்பங்களின் மனதில் உருவாகியுள்ளது.
இந்த நிலையை புரிந்துகொள்ள, தங்கம் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும், தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையையும் சரியாக ஆய்வு செய்வது அவசியமாகிறது.

இரண்டு முக்கிய காரணிகள்
தங்கத்தின் விலை உயர்வு அல்லது சரிவு என்பது பொதுவாக இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அமைகிறது. ஒன்று 'Risk' (அபாயம்), மற்றொன்று 'Chaos' (அவசர குழப்பம்). இந்த இரண்டு நிலைகளும் சந்தையில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
'Risk' நிலை உருவாகும்போது, அதாவது பணவீக்கம் அதிகரித்தல், நாணய மதிப்பு குறைதல், ரூபாய் பலவீனம் போன்ற சூழ்நிலைகள் உருவானால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக தங்கத்தை தேர்வு செய்கிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்கிறது.
2025ல் ஏற்பட்ட ஏற்றம்
2025ஆம் ஆண்டில் இதே நிலை ஏற்பட்டது. உலகளவில் பொருளாதார அபாயங்கள் அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் மாற்றத் தொடங்கினர். குறிப்பாக டிரம்ப்-ன் வர்த்தக கொள்கைகள் மற்றும் வரி (tariff) தொடர்பான நடவடிக்கைகள் உலக சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் $5400 வரை உயர்ந்தது. டாலரின் மதிப்பு குறையும் நிலையில், தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறியது.
'Chaos' நிலையின் தாக்கம்
ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. உலகளவில் போர் மற்றும் அவசர சூழ்நிலைகள் அதிகரித்துள்ளதால், நாடுகள் உடனடி பண தேவைக்காக தங்கள் தங்க சேமிப்புகளை விற்க ஆரம்பித்துள்ளன.
ஒரு குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டால், சேமித்த தங்கத்தை விற்று பணம் திரட்டுவது போலவே, உலக நாடுகளும் தங்கள் Gold Reserves-ஐ பயன்படுத்துகின்றன. இதனால் சந்தையில் தங்கத்தின் சப்ளை அதிகரித்து, விலை குறையத் தொடங்கியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு
இந்த நிலையில் மிக முக்கியமான காரணமாக எரிசக்தி சந்தை உள்ளது. குறிப்பாக Strait of Hormuz பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பல நாடுகள் மாற்று ஆதாரமாக அமெரிக்காவில் இருந்து அதிக விலையில் எண்ணெய் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஆனால், இந்த கொள்முதலில் டாலரில் மட்டுமே நடைபெறும். இதனால், உலக நாடுகள் தங்கள் கையிலுள்ள தங்கத்தை விற்று டாலர் சேகரித்து, அதனை எண்ணெய் இறக்குமதிக்காக பயன்படுத்துகின்றன. இது தங்க விலையை மேலும் கீழே தள்ளும் முக்கிய காரணமாக உள்ளது.
முக்கிய அட்வைஸ்
இத்தகைய சூழ்நிலையில், தங்கத்தை வாங்குபவர்கள் குறைந்தாலும், சில பெரிய நாடுகள் இந்த சரிவை பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சீனா போன்ற நாடுகள், விலை குறைந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி தங்கள் இருப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளன.
மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதா?
தற்போது தங்க விலை குறைந்தாலும், இது நிரந்தரமான சரிவு அல்ல. உலக பொருளாதாரத்தில் மீண்டும் 'Risk' நிலை அதிகரித்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்புவார்கள். அப்போது விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில், தங்கம் விலை தற்போது குறைவாக இருப்பது 'Chaos' நிலையின் விளைவாகும். ஆனால் நீண்டகாலத்தில் இது மீண்டும் உயரக்கூடிய சொத்தாகவே உள்ளது.
எனவே, உடனடி லாபம் எதிர்பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீண்டகால முதலீட்டை நோக்கமாகக் கொண்டவர்கள், சந்தை சரிவை ஒரு வாய்ப்பாக பார்க்கலாம். ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், தற்போதைய உலக நிலவரத்தை முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications