தங்கம் விலை 2020ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அதிகளவிலான உயர்வைப் பதிவு செய்த நிலையில் 10 கிராம் தங்கம் 56,200 என்ற வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டில் ஆர்வம் காட்டுவதில் இருந்து பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோ சந்தைகளில் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த 6 மாதத்தில் தங்கம் விலை தனது உச்ச அளவில் இருந்து சுமார் 10000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

தங்கம் விலை
2020ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 56,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று, 47,180 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஒரு சவரன் தங்கம் 35,000 ரூபாய் என்ற அளவீட்டில் இருந்து சரிந்து நீண்ட காலத்திற்குப் பின் 34,600 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை இதன் விலை 34,400 ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் நகை வாங்க மக்கள் கூட்டம்
ஆபரணத் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பின் முதல் முறையாக 35,000 ரூபாய்க்குக் குறைவாகச் சரிந்துள்ள காரணத்தால் சாமானிய மக்கள் நகைக் கடைகளுக்கு அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர். குறிப்பாக டவுன் மற்றும் கிராமப் பகுதிகளில் தங்கம் மற்றும் தங்க நகைகளின் விற்பனை மிகவும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை
இதேபோல் வெள்ளி விலையில் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இன்றும் 1 கிலோ தங்கம் விலை 68,700 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சர்வதேச சந்தையில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா தொழிற்சாலை முடங்கியது
அமெரிக்காவில் பல பகுதிகளில் கடும் பனி மற்றும் குளிர் நிலவும் காரணத்தால் பல தொழிற்சாலை, நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் அல்லாமல் பல லட்சம் குடும்பங்கள் எப்போதும் இல்லாத வகையில் மின்சாரத் துண்டிப்பு, எரிவாயு நிறுத்தம் எனப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கப் பங்குச்சந்தை
இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாகத் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நாஸ்டாக் குறியீடு பிப்ரவரி 12ஆம் தேதி வரையில் தொடர் உயர்வில் இருந்தது. இதனால் பிப்ரவரி 12ஆம் வர்த்தக முடிவில் 14,095.47 புள்ளிகளில் முடிவடைந்தது.

கடும் பனி
13 மற்றும் 14ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பல முக்கியமான பகுதிகளில் கடும் பனி ஏற்பட்டது, இதன் எதிரொலியாகக் கடந்த 5 நாட்களாக நாஸ்டாக் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் நேற்றை வர்த்தக முடிவில் 13,874.46 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

கொரோனா தொற்று
மேலும் கொரோனா தொற்று அமெரிக்காவில் முழுமையாகக் குறைக்கப்படாத நிலையில் இந்தத் திடீர் குளிர் கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்குமா என்ற முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் முதலீட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

சர்வதேசச் சந்தை அளவீடு
அமெரிக்கப் பங்குச்சந்தையில் தொடர்ந்து வரும் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீடு அதிகரித்துள்ளது.
இந்தத் திடீர் முதலீட்டின் வாயிலாக ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் 1,769.95 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் 1790 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

MCX சந்தை நிலவரம்
இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் 5ஆம் தேதி முடியும் பியூச்சர் ஆர்டரின் விலை 0.14 சதவீதம் வரையில் உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 46,190 ரூபாய் வரையில் உயர்ந்தது.

MCX புல்லியன் குறியீடு
இதேபோல் புல்லியன் குறியீடு மாலை 6 வரையில் 14,721 புள்ளிகள் கீழ் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் 14,800 புள்ளிகள் வரையில் உயர்ந்து வர்த்தக முடிவில் 14,770 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவடைந்தது.

தங்கம் விலை உயரலாம்
இதனால் அடுத்த சில நாட்களுக்குத் தங்கம் விலை உயர அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. மேலும் உலக நாடுகளில் பணவீக்கத்தின் அளவும் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவியும் அதிகரித்து வரும் காரணத்தால் தங்கம் விலை உயர்ந்தாலும் 2020ஆம் ஆண்டு அளவீடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கணிக்கப்படுகிறது.
இதனால் தற்போது நிலவும் சூழ்நிலை தங்க நகைகள் வாங்க ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.