சர்வதேச நிதிச் சந்தைகளில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது தங்களுடைய முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான பிரச்சனை பூதாகரமாகியுள்ளதால் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
தங்கம் விலை வெள்ளிக்கிழமை ஆசிய சந்தை நேரத்தில் ஒரு அவுன்ஸ் 2,410 டாலர் என்ற புதிய வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. முதல் முறையாக தங்கம் விலை 2400 டாலர் என்ற அளவீட்டை தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஈரான் நாட்டின் மத்திய பகுதியான இஸ்ஃபஹான் நகர விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற அனுமானங்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரான் நாட்டில் எவ்விதமான ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை, வெடிப்பு சத்தம் கேட்டது, ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்தது என தெரிவித்துள்ளது.
இது விலை உயர்வு ஏற்கனவே தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தாலும், புதிதாக தங்கம் வாங்குவோருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் உயர்ந்து வரும் தங்கம் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்யவேயில்லை என்பது தான் உண்மை.
போர் பதற்றம், பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் மற்றும் பிற ஆபத்துமிக்க சொத்துகளின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பதைத் தவிர்க்க, பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
அமெரிக்க டாலரின் உயர்வும் தங்கத்தின் விலை உயர்வுக்கு சவாலாக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட கருத்துக்களால் பத்திர முதலீடுகள் மீதான லாபமும் அதிகரித்தது, டாலர் மதிப்பு106க்கு மேல் வர்த்தகமாகிறது.
இதனால், அமெரிக்க டாலரைத் தவிர பிற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது அதிக செலவாகிறது. இந்தியாவில் தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் தங்கம் விலை உயர்வுக்கு டாலர் மதிப்பும் முக்கிய காரணியாக உள்ளது.
தற்போதைய சூழலில், தங்கத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்று முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருபுறம் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது, மறுபுறம் அமெரிக்க டாலரின் பலம் தங்கத்தின் விலை உயர்வுக்கு தடைப்படுகிறது (சர்வதேச சந்தையில் மட்டும்). இந்த சூழலில் எதில் முதலீடு செய்வது என்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.


Click it and Unblock the Notifications