தங்க விலை வரலாறு காணாத வகையில் இன்று உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை செப்டம்பர் மாதம் மத்தியில் 2600 டாலர் அளவீட்டைக் கடந்த நிலையில் இன்று சற்றும் எதிர்பாராத விதமாக 2,700 டாலர் அளவீட்டைத் தாண்டி பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்டதற்கு முக்கியமான காரணமாக, மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள் குறிப்பாக ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்டவை தங்கம் விலை தாறுமாறாக உயர்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை ஏற்கனவே 10 கிராமுக்கு ரூ.78,000 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் MCX தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.77,000 ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தொடர்ச்சியான மோதல் மற்றும் ஹெஸ்புல்லாவின் மூலம் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள், அமெரிக்கத் தேர்தல், ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மாற்றியுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய மத்திய வங்கியின் நேற்றைய வட்டி குறைப்பிற்குப் பின்பு தங்கத்தின் தேவையைக் கணிசமாக அதிகரித்துள்ளன. சீனா பங்குச்சந்தை சிறப்பான வாய்ப்பாக இருந்தாலும், அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தால் கட்டாயம் சீன முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படும், இதைக் காரணமாகக் காட்டியும் முதலீட்டாளர்கள் தங்கம் மீது தினமும் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.
அமெரிக்க பொருளாதாரம் குறித்த கவலைகளும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே உள்ளது, வலுவான பொருளாதார வளர்ச்சி அறிகுறிகள் மத்தியிலும், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய குறைந்த வட்டி விகிதங்கள், தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிபர் தேர்தல் போட்டி பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கும் நிலை உருவாக்கியுள்ளது. இந்த தடுமாற்றத்திலிருந்து தப்பிக்கவும் முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
மேத்தா எக்விட்டியின் துணைத் தலைவர் ராகுல் கூறுகையில், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் மத்திய வங்கி கொள்கைகளால் தங்க விலை 2,500 மற்றும் 2,800 டாலருக்கு மத்தியில் வர்த்தகம் செய்யும் என கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications