தங்கம் எப்போதும் ஆபத்தான காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களுக்கும் கைகொடுக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. கொரோனா தொற்றுக் காலத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் தரையைத் தொட்ட நிலையில் தங்கம் தான் பல நாடுகளையும், பல முதலீட்டாளர்களையும் காப்பாற்றியது.
கொரோனா-வை விட மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக என்றால் இல்லை, ஆனாலும் தங்கம் விலை வரலாறு காணாத உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர என்ன காரணம்..? இந்தியாவில் இனி எப்போது தங்கம் குறையும்.

திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2100 டாலர் என்ற சீலிங்-ஐ உடைத்து 2144 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின்பு தங்கம் விலை 2100 டாலரை தாண்டியுள்ளது. இதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளது.
முதல் காரணம்: ஞாயிற்றுக்கிழமை யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங் கடலில் (Red Sea) மூன்று வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. செங் கடலில் நடந்த இந்தத் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
இரண்டாவது காரணம்: வெள்ளிக்கிழமையன்று ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மீண்டும் தோல்வியடைந்ததுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டின் இராணுவம் காசா-வில் மீண்டும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் தாக்குதலை மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் காசா பகுதியில் மீண்டும் மக்கள் பீதியுடன் உள்ளனர்.

மூன்றாவது காரணம்: உலக நாடுகளின் நாணயங்களில் எப்போதும் பாதுகாப்பான நாணயம் எனப் பெயரைப் பெற்ற அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் அமெரிக்க மத்திய வங்கி மார்ச் மாதம் தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் 60 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி டாலர் மதிப்பு சரிந்து வருகிறது.
இதன் மூலம் டாலர் குறியீடான DXY 103.32 ஆகக் குறைந்துள்ளது, இதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.33 ரூபாயாக உள்ளது.
நான்காவது காரணம்: உலகத் தங்க கவுன்சில் (WGC) சமீபத்தில் செய்த ஆய்வில் உலக நாடுகளின் அனைத்து மத்திய வங்கிகளில் சுமார் 24% மத்திய வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் தங்களுடைய தங்க இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை 2100 டாலர் அளவீட்டில் அடுத்த சில வாரங்களில் கட்டாயம் பயணிக்கும், இதேவேளையில் மத்திய வங்கிகளும் தங்க இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ள காரணத்தால் தங்கம் விலையில் அடுத்த சில வாரங்களில் பெரிய அளவிலான சரிவுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.


Click it and Unblock the Notifications