சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதன்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,380 டாலர் அளவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு தற்போது முக்கிய காரணியாக இருப்பது ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் தான்.
கடந்த சனிக்கிழமை இரவு ஈரான் 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன் கொண்டு நடத்திய வான்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது பதிலை அறிவிக்கும் வரை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட முடிவு செய்துள்ளனர்.

இதனால் தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களது முதலீட்டை வெளியேற்றாமல் அப்படியே வைத்திருக்கும் காரணத்தால் தொடர்ந்து வரலாற்று உச்ச நிலையிலேயே உள்ளது.
இஸ்ரேலின் பதிலடி குறித்த பதற்றம்: ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, ஈரானின் தாக்குதலுக்கு பதிலளிப்பது குறித்து முடிவெடுக்க இஸ்ரேலின் போர்க் குழுவின் மூன்றாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதைப் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்ட தகவல் படி, ஈரானுக்கு எதிராகப் பதில் தாக்குதலுக்கான திட்டங்களை இஸ்ரேல் உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன. இதனால் இஸ்ரேல் எப்போது தனது தாக்குதலை நடத்தும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் ஈரான் மீதான புதிய தடை: இஸ்ரேல் மீது ஈரான் நாட்டின் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டுக் கிளர்ச்சி படைகளுக்கு அரசு ஆதரவு அளிப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஈரான் மீது புதிய வர்த்தகம் அல்லது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுவிலியன் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த புதிய தடைகள் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும்.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு: இதற்கிடையில், ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தில் பேசுகையில், வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளைக் குறைத்தார். 2% பணவீக்க இலக்கை அடைவது "எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக நேரம்" எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் பதற்றம் மற்றும் ஈரான் மீதான புதிய தடைகள் தங்கத்திற்கான தேவையை அதிகரித்து, விலையை உயர்த்துள்ளன. அதே நேரத்தில், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு குறைந்து வருவதும் தங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 1 மாதத்தில் தங்கம் விலை 2450 டாலர் வரையில் உயரும், இதனால் சவரன் 60000 ரூபாய் அளவீட்டைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் நாட்களில் உலக அரசியல் சூழ்நிலை மற்றும் ஃபெடரல் ரிசர்வ்-வின் கொள்கை முடிவுகள் தங்க விலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நினைக்கும் போதே பல சாமானிய மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.


Click it and Unblock the Notifications