தங்கம் விலை இன்று உள்நாட்டு சந்தையிலும், சரி வெளிநாட்டுச் சந்தையிலும் சரி சாதனை உயர்வை எட்டியுள்ளது. ஆசிய சந்தையில் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,250 டாலர் என்ற முக்கிய பென்ச்மார்க் அளவை தாண்டி 2265 டாலரை நெருங்கியுள்ளது.
இந்த உயர்வுக்குப் பல காரணிகள் இருந்தாலும், அமெரிக்கப் பணவீக்க தரவுகளும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்புக்கான சாதகமான வாய்ப்புகள் இந்த விலை உயர்வுக்குப் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் குறைந்தால், பத்திர முதலீடுகளின் லாப அளவுகள் குறைந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறும். இதனால், பணவீக்க பாதுகாப்பாகத் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரிக்கும். இதேபோல் பத்திர சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் பங்குச்சந்தைக்கும் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதேவேளையில் பத்திர முதலீட்டைப் போல் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவோர் தங்கம் மீது அதிகம் முதலீடு செய்வார்கள்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்: மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யலாம், எனவே பணவீக்க பாதுகாப்பைத் தேடும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்ப வாய்ப்பு அதிகம், இதன் தொடக்க நிலை அதிரடிகள் தான் இது.
சீனாவின் பொருளாதார மீட்சி: சீனா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் சந்தையாகும். சீனாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையுமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இது சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்கும், உலக தங்க விலை உயர்வதற்கும் வழிவகுக்கும்.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைப் படம் போட்டுக் காட்டுகிறது. பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை பாதுகாக்க பிட்காயின், தங்கம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்ய வழிவகை செய்கிறது. எனவே, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது தேவை அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications