பல தங்கம் சார்ந்த கட்டுரைகளில், பொருளாதாரம் அடி வாங்கும் போது, தங்கம் விலை ஏறும் எனச் சொல்லி இருந்தோம்.
அதே போல பங்குச் சந்தை போன்ற முதலீட்டு வாய்ப்புகள் அடி வாங்கும் போதும் தங்கம் விலை ஏறும் எனக் குறிப்பிட்டு இருக்கிறோம்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை சில வாரங்களாக மந்த கதியில் தான் இருக்கின்றன. அது ஏன்? இனி என்ன ஆகும்? வாருங்கள் பார்ப்போம்.
தங்கம் விலை மந்தமா?
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் இன்று சுமாராக 1,712.5 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு 1,748 டாலரைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. ஆக தங்கம் விலை மந்தமடைந்து இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஏன் தங்கம் விலையில் தடுமாற்றம்?
கடந்த ஏப்ரல் 2020-ல் இருந்து பல்வேறு உலக சந்தைகளும் மெல்ல வளர்ச்சி காணத் தொடங்கி இருக்கின்றன. இது தங்கம் விலை இறக்கத்தை ஊக்குவிக்கும். ஆனால் சர்வதே அளவில் கொரோனா தவிர மற்ற பிரச்சனைகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. உதாரணம் சீனா - இந்தியா போர் பதற்றம், அமெரிக்க சீன வர்த்தகப் போர், போன்றவைகள் தங்கம் விலை ஏற்றத்தை ஊக்குவிக்கும். இதனால் தான் தங்கம் விலை தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தங்கம் விலை
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில் ஆகஸ்ட் 2020 மாத 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 46,654 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால், இதன் 1 நாள் சார்ட்டை எடுத்துப் பார்த்தால் கடந்த 18 மே 2020 அன்று 48,190 ரூபாயைத் தொட்டது தான், ஆகஸ்ட் காண்டிராக்டின் உச்ச விலை. ஆக இந்தியாவிலும் தங்கம் விலை சரிவதை இது உறுதிச் செய்கின்றன.
ஆபரணத் தங்கம்
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,740 ரூபாய்க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. இது 24 கேரட் தங்கத்தின் வாழ் நாள் உச்ச விலையான 49,220 & 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் உச்ச விலையான 45,120 ரூபாயை விட குறைவு. எனவே எங்கு பார்த்தாலும் தங்கம் விலை தடுமாறுவதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இனி என்ன?
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் வட்டி விகித அறிவிப்புகள், சர்வதேச அளவில் தங்கம் விலையை பாதிக்கலாம். அதோடு, பலரும் தங்கத்தில் இத்தனை நாள் முதலீடு செய்து பார்த்த லாபத்தை வெளியே எடுக்கலாம். எனவே மேற்கொண்டு தங்கம் விலை தேக்கம் காணலாம். சரி என்ன ஆனால் தங்கம் விலை ஏறும்..?
இது நடந்தால் விலை ஏறும்
1. ஃபெடரல் ரிசர்வ் மேலும் வட்டி விகிதங்களைக் குறைத்தால் விலை ஏறும்.
2. அமெரிக்க சீன பிரச்சனைகள், இந்தியா சீனா போர் போன்ற பிரச்சனைகள் மேலும் அதிகரித்தால் விலை ஏறும்.
3. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டால் தங்கம் விலை ஏறும். இதெல்லாம் நடக்குமா என்பதை நாம் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications