தங்கம் விலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்னர் அதாவது அக்டோபர் 30ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த வாரம் தங்க விலை தொடர் உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. 1000 நாட்களாக நடந்து வரும் போர், மீண்டும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதனால் இந்திய சந்தையில் டிசம்பர் மாத திருமணங்களுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டவர்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கம் வாங்குவதற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த 5 நாட்களாகத் தங்கம் விலை உயர்வதைத் தொடர்ந்து பொறுத்திருந்தது போதும் என முடிவு செய்து தங்கம் விலை பெரிய அளவில் உயர்வதற்கு முன்பு தங்கம் வாங்க முடிவு செய்து நகை கடைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

கடந்த வாரம் வரையில் குறைந்து வந்த தங்கம், இந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் 3000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7225 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் எனில் 1 கிராம் 7882 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு டாலர் வலுவடைந்ததால் தங்க விலை கணிசமாகக் குறைந்தது. இதனால் தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்து திருமணத்திற்காகத் தங்கம் வாங்குவோர் நகை வாங்கும் முடிவைத் தள்ளிவைத்தனர், ஆனால் இந்த வாரம் செயல்பாடு மொத்தமும் மாற்றியுள்ளது. இதனால் இந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை கமா ஜுவல்லரியின் மேலாண் இயக்குநர் கொலின் ஷா கூறுகையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான பதற்றம் அதிகரிப்பதால் தங்க விலை உயர்வதாகக் கூறினார். உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதும், ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கைகளும் தங்க விலையை மேலும் உயர்த்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால், திருமண நகைகளுக்கு முன்பதிவு செய்ய மக்கள் மீண்டும் நகைக்கடைகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். விலை இன்னும் உச்சத்தை அடையவில்லை என்றாலும், விலை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவும் காரணத்தால் தங்க நகை அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலை உலகளாவிய சந்தையில், குறிப்பாகத் தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல் அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றமும் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications