வெள்ளிக்கிழமை தங்கச் முதலீட்டு சந்தை காலையில் மந்தமாக செயல்பட்டாலும் மதியத்திற்கு மேல் அதிரடியாக செயல்பட்டு தங்கம் விலையை தடாலடியாக உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 2 உள்ளது. ஒன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் பணவீக்கம் கணிப்பு, இரண்டாவது இஸ்ரேல் போர் பிரச்சனையில் ஈரான் தலையீடுவதாக வரும் தகவல்கள்.
வெள்ளிக்கிழமை வெளியான தகவல்கள் படி அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கநிலை அபாயத்தை கொண்டு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. தேக்கநிலை என்றால் stagflation, இது அமெரிக்கா போன்ற பொருளாதார நாடுகளில் வருவது பெரும் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் stagflation வந்துவிட்டது என்றால் அந்த நாட்டில் மெதுவான பொருளாதார வளர்ச்சி ( பொருளாதாரத்தில் தேக்க நிலை), விலைவாசி உயர்வு அதாவது பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேலையின்மை அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்வது தான் இந்த Stagflation நிலை.
இதேபோல் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் அந்நாட்டின் நுகர்வோர் உணர்வு குறியீட்டு 63 ஆக சரிந்தது, இது செப்டம்பர் மாதத்தில் 68.1 ஆக இருந்தது. இதனால் அமெரிக்காவில் அடுத்த சில மாதங்களுக்கு நுகர்வோர் சந்தையும் மந்தமாக இருக்கும் என தெரிகிறது.
இஸ்ரேல் நாட்டுடன், பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்பிற்கும் கடந்த ஒரு வாரமாகக் கடுமையான தாக்குதல் காசா பகுதியில் நடந்து வரும் வேளையில் இதன் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் லெபனான் ஆகியவையும் இந்தச் சண்டையில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளும் பதற்றத்தில் உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனையில் உலகளவில் முக்கியக் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ஈரான் நுழைந்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து கச்சா எண்ணெய் விலை உயர கூடும்.
இவ்விரு காரணத்தால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1868.97 டாலர் அளவில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் தடாலடியாக 1914 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு பொருளாதார மனநிலையை உணர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு முதலீட்டை மாற்றியுள்ளது.
எம்சிஎஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் காலையில் இருந்து கணிசமான வர்த்தகத்தை பெற்று வந்த நிலையில் மதியத்திற்கு மேல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.89 சதவீதம் உயர்ந்து 59,015.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 2.64 சதவீதம் உயர்ந்து 70,900 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 55,100 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1040 ரூபாய் உயர்ந்து 60,110 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 44,080 ரூபாயாக உள்ளது.
மேலும் உள்நாட்டு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 1500 ரூபாய் அதிகரித்து 77,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 510 ரூபாய் குறைந்து 23,230 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications