சென்னை: சர்வதேச அளவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து வருவதால் அதன் விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உயர்வாக 10 கிராம் 77, 839 ரூபாய் என்ற அளவை எட்டியது. அதே வேளையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ் 2072 அமெரிக்க டாலர்கள் என வரலாறு காணாத உயர்வை எட்டியது.
இவ்வாறு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதற்கு சர்வதேச அளவில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மேற்கொண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற தகவல் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம். ஏனெனில் பாதுகாப்பான முதலீடு என கருதி பெரும்பாலானவர்கள் தங்கத்தை நோக்கி செல்வதே தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்த நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்க இருப்பதால் உள்நாட்டு சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும். இத்தகைய ஒரு சூழலில் முதலீட்டாளர்கள் தீபாவளிக்கு முன்னரே தங்கத்தை வாங்கலாமா அல்லது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீபாவளியை ஒட்டி தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். எனவே தான் அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
தீபாவளி நெருங்க நெருங்க உள்நாட்டில் தேவை அதிகரிப்பதால் தங்கத்தின் விலை நிச்சயமாக உயரும் என Kama Jewelryஇன் மேலாண் இயக்குனர் காலின் ஷா கூறுகிறார். எனவே தங்கத்தை தீபாவளிக்கு முன்னரே வாங்கி வைப்பது சிறந்தது என தெரிவிக்கிறார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலை காட்டிலும் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியான பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அது தங்கத்தின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடையும் எனக் கூறுகிறார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றன. அதுமட்டுமின்றி ஈரான் இஸ்ரேல் மோதல் மேலும் வலுக்கலாம் என சொல்லப்படுவதால் அதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என கூறப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications