சர்வதேச அளவில் தங்கத்தின் விலை என்பது சர்வதேச பொருளாதார சூழல், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள், குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே நிலவக்கூடிய போர் பதற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தீர்மானிக்கிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் பொருத்தவரை தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இதற்கு ஈரான் இஸ்ரேல் மோதல் மற்றும் அமெரிக்க சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

இவ்வாறு சர்வதேச அளவில் அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ ஸ்திரமற்ற தன்மை ஏற்படுகிறது என்றால் அனைவரும் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள். எனவே தான் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து அதன் விலையும் அதிகரிக்கிறது.
2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி தங்கத்தின் விலை மிதமான வளர்ச்சியை அடையும் என உலக தங்க கவுன்சில் கணிப்பு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தங்கம் நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை காணும் என சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, பத்திரங்களில் கிடைக்கும் வருமானம் மற்றும் பண வீக்கம் போன்ற முக்கிய பொருளாதார சூழல்கள் தங்கத்தின் விலை மிதமான வளர்ச்சி எட்டும் என்றே குறிப்பிடுகின்றன என உலக தங்க கவுன்சில் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இரண்டாவது முறையாக அவர் அதிபர் பதவியை கைப்பற்றி இருக்கிறார். அவர் அதிபர் பதவி ஏற்றவுடன் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் குறிப்பாக அமெரிக்காவில் தொழில்துறைகளை ஊக்குவிக்கவும் ,வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என உலகமே உற்று கவனித்து வருகிறது.இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் மாற்றங்களை காணலாம் என சொல்லப்படுகிறது.
மேலும் அமெரிக்க மத்திய வங்கி தங்களுடைய வட்டி விகிதத்தை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இதுவும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும். சர்வதேச அளவில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் தான் மிகப்பெரிய அளவிலான தங்க சந்தைகளாக இருக்கின்றன. எனவே இந்த இரண்டு நாடுகளிலும் இருக்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் தேவை ஆகியவையும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை கொண்டு வரும்.
உக்ரைந் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்தால் அதுவும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி கையிருப்பு வைத்தன என்பதால் 2025ஆம் ஆண்டிலும் அவை இதே நிலைப்பாட்டை தொடர்ந்தால் அதுவும் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கு காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது. 2024ஐ போல மிக அதிக வளர்ச்சி இல்லை என்றாலும் தங்கத்தின் விலையில் சீரான வளர்ச்சி இருக்கும் என கருதப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications