ஒரு கிராம் கூட தங்கம் வாங்காமல், ஒரு திருமணம், காது குத்து போன்ற நல்ல காரியங்களை நம் இந்தியாவில் நடத்தி விட முடியாது.
எல்லாவற்றுக்கும் ஒரு பொட்டு தங்கமாவது அவசியம். அந்த அளவுக்கு இந்தியர்களாகிய நாம், உணர்வால் தங்கத்தோடு பிணைக்கப்பட்டு இருக்கிறோம்.
இந்த சென்டிமென்டை வைத்து தான், இந்தியாவில் தங்க வியாபாரம் ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இந்த தங்கத்தின் விலை கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்பது தான் செய்தி.
விலை நிலவரம்
சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 4,252 ரூபாய் வீதம், இன்று 42,520 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலை ஏற்றம் என்கிறார்கள் பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை அனலிஸ்டுகள்.
முதல் ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாவது ஏற்றம்
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) நிதானமாக ஏற்றம் கண்டு வந்து, செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டது.
மூன்றாவது விலை ஏற்றம்
கடந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின், ஜனவரி 02, 2020 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களைக் காணவில்லை. 41,070 ரூபாய்க்குள் தான் விற்பனை ஆனது. ஆனால் கடந்த ஜனவரி 03, 2020 அன்று தான், தங்கம், மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கி, தற்போது 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 42,520 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில்
கடந்த ஒரு மாத காலத்தில் மிகக் குறைந்த விலை என்றால்.. அது டிசம்பர் 11, 2019 தான். அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,170 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று 42,520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆக சுமார் ஒரு மாத காலத்தில் தங்கம் விலை 3,350 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.
எப்போது வாங்கலாம்..?
கடந்த செப்டம்பர் 2019-க்குப் பின், 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் உச்ச விலை ரூ. 3,897, குறைந்தபட்ச விலை ரூ. 3,545. கடந்த செப்டம்பர் 2019-ல் இருந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,600-க்குக் கீழ் போன போது வாங்கி இருந்தால் ஜாக் பாட் தான். எனவே அந்த விலைக்கு தங்கம் கிடைக்கத் தொடங்கினால், வாங்கலாமா, வேண்டாமா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் டூட்.


Click it and Unblock the Notifications