அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இறக்குமதி வரி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு உலகளவில் தங்கத்தின் விலையில் சற்றே இறக்கத்தை கொண்டு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.20 சதவீதம் குறைந்து 3,328.41 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது (காலை 9.30 மணி அளவில்) . ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.3495 கிராம்கள் ஆகும். நேற்று 3,345 டாலர்கள் வரை எட்டிய தங்கம் விலை இன்று 3,328 டாலர்களுக்கு சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 36.78 டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் ஜூலை 9ஆம் தேதி வரை வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த கெடு முடிவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கிறது.
இந்நிலையில் டிரம்ப் ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 1 முதல் அது நடைமுறைக்கு வருவதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் மற்ற நாடுகளுக்கான வரி குறித்து நாளை அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் தற்போதைக்கு டிரம்பின் அறிவிப்பை பொறுத்து முடிவுகளை மேற்கொள்ளலாம் என இருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை லேசாக குறைந்துள்ளது.
இந்திய சந்தையில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம்கள் தங்கத்தின் விலை 97,172 ரூபாய் என வர்த்தகத்தை தொடங்கியது. நேற்று வர்த்தகம் முடியும் போது 10 கிராம் தங்கம் விலை 97,270 ரூபாய் என இருந்த நிலையில் 98 ரூபாய் விலை குறைந்து இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதே வேளையில் வெள்ளியின் விலையை பொறுத்தவரை நேற்று வர்த்தகம் முடியும் போது 1,08,321 ரூபாய் என இருந்தது. இன்று 1 கிலோ வெள்ளி 1,08,498 ரூபாய் என வர்த்தகமாகிறது.
ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜிகார் திரிவேதி இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் கோல்டு ஆகஸ்ட் பியூச்சர்ஸின் மதிப்பு 10 கிராம் 96,800 ரூபாய் வரை சரியும் என கணித்துள்ளார். உலக சந்தையில் தங்கம் அவுன்ஸ் விலை 3,315 டாலர்களில் இருந்து 3,295 டாலர்களை வரை சரிய வாய்ப்புள்ளது என மேத்தா ஈக்விட்டீஸ் நிறுவன தலைவர் ராகுல் கலாந்திரி கூறுகிறார்.


Click it and Unblock the Notifications