உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்ததை தொடர்ந்து அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதன் நாணய கொள்கையை கட்டுப்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 3 முறை வட்டி விகிதத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒரு அறிவிப்பு மூலம் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் நேற்று இரவு மாறியது. பெடரல் ரிசர்வ்-ன் இந்த முடிவு அந்நாட்டின் பத்திர சந்தையில் குவிந்திருந்த பல டிரில்லியன் டாலர் மொத்தமாக வெளியேறி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பங்குச்சந்தையில் குவிந்தது.

இதன் எதிரொலியாக டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் குறியீடுகள் நேற்றைய வர்த்தகத்தில் 1.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் டாலர் நாணயம் அதிகளவில் வெளியேறிய காரணத்தால் டாலர் மதிப்பு குறைய துவங்கி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்தது.
இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று மாலை வரையில் 1980 டாலராக இருந்த நிலையில், பெடரல் ரிசர்வ் அறிவிப்பை தொடர்ந்து தடாலடியாக 2039 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தடாலடியாக உயர முக்கியமான காரணம் அமெரிக்க டாலர் மதிப்பீட்டை அளவிடும் DXY குறியீடு ஒரு இரவில் 103.92ல் இருந்து 102.53 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் பத்திர சந்தையில் இருந்தால் கட்டாயம் இழப்பு ஏற்படும் எனவே பாதுகாப்பான முதலீட்டை தேடும் முதலீட்டாளர்கள் தங்கம் மீது ஜம்ப் அடித்துள்ளனர். இந்த விலை மாற்றம் கட்டாயம் இந்திய சந்தையில் எதிரொலிக்கும்.
எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை தடாலடியாக 2.09 சதவீதம் உயர்ந்து 62,475.00 ரூபாய் விலையிலும், மார்ச் மாதம் முடியும் வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை வியக்கவைக்கும் வகையில் 4.12 சதவீதம் உயர்ந்து 74,481.00 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்து 58,200 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1310 ரூபாய் உயர்ந்து 63,490 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 46,560 ரூபாயாக உள்ளது.
இதோடு ரீடைல் சந்தையில் அதிகளவில் விற்கப்படும் வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 2500 ரூபாய் உயர்ந்து 79500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலையும் 10 கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து 25,140 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications