மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.
பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவது தவிர்க்க வேண்டும் என இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தங்கம் இறக்குமதி குறையும் இதனால் இந்தியா அனாவசியமாக தன் கைவசம் உள்ள அமெரிக்க டாலரை தங்கும் இறக்குமதிக்கு செலவு செய்யாமல் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு செலவு செய்யும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையாக இருந்தது.

இந்த சூழலில் மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. மத்திய அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ஒரே நாளில் உயர்த்தி இருக்கிறது. நேற்று வரை தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக தான் இருந்தது ஆனால் இன்றிலிருந்து அது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாக நகை விற்பனை நிறுவனங்கள் தங்கம் வெள்ளி விலைகளை உயர்த்தி இருக்கின்றன.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,330 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 1,070 ரூபாய் உயர்ந்து 15,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14 ,640 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 8,560 ரூபாய் உயர்ந்து 1,23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேலும் சவரனுக்கு 8000 ரூபாய்க்கு மேலும் உயர்ந்து சாமானிய மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 134,400 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1,68,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது ஒரு கிராம் 12,860 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு வார காலமாக ஏறுமுகமாகவே இருந்து வரக்கூடிய வெள்ளி இன்றைய தினம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் 30 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 30000 ரூபாய் உயர்ந்து 3.30 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
இறக்குமதி வரி ஒரே நாளில் 6%இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டதே தங்கம், வெள்ளி விலைகள் இப்படி தடாலடியாக உயர்வதற்கு காரணமாக உள்ளது. இனி வரும் நாட்களில் தங்கம், வெள்ளி என இரண்டு உலோகங்களுமே சற்று ஏறுமுகத்திலேயே தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


