இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த காரணத்தால் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் அதிகளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டினர். ஆனால் இந்தச் சரிவு நீண்ட காலம் நீட்டிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெருமளவிலான தடுமாற்றத்தைக் கண்ட தங்க முதலீட்டுச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய முதல் வளர்ச்சிப் பாதையில் இருந்தது. குறிப்பாக ஐரோப்பியச் சந்தை துவங்கிய பின்பு தங்கம் விலை அதிகளவில் உயரத் துவங்கியது.
MCX சந்தை தங்கம் விலை
இதன் எதிரொலியாக MCX சந்தை வர்த்தகத்தில் நேற்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 44,218 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 0.84 சதவீதம் வளர்ச்சி அடைந்து 44,590 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 360 ரூபாய் வரையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
இதேபோல் வெள்ளியின் விலை நேற்று 65,852 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 1.64 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,933 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தால் வெள்ளி மீண்டும் 70,000 ரூபாய் அளவீட்டைத் தொட்டு விடும்.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேச சந்தையில் இன்றைய வர்த்தகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,681.94 டாலர் வரையில் குறைந்த நிலையில், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உயரத் துவங்கிய தங்கம் விலை மாலை 5.40 மணியளவில் அதிகப்படியாக 1,706 வரையில் உயர்ந்துள்ளது.
டாலர் - ரூபாய் மதிப்பு
இதேபோல அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.33 ரூபாயில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 72.94 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச புல்லியன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1.25 லட்சம் ரூபாய் அளவீட்டைத் தாண்டாமல் 1,24,466 ரூபாய் அளவீட்டில் உள்ளது.


Click it and Unblock the Notifications